ஹரியாணா அரசியலில் திருப்பம்: துஷ்யந்த் சௌதாலா கட்சியிலிருந்து 4 எம்எல்ஏக்கள் திடீர் விலகல்!

By KU BUREAU

சண்டீகர்: ஹரியாணாவில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அம்மாநில முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியில் இருந்து 4 எம்எல்ஏக்கள் விலகியுள்ளனர்.

ஜனநாயக் ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் ஈஸ்வர் சிங், ராம்கரன் கலா மற்றும் தேவேந்திர பப்லி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று ராஜினாமா செய்தனர். அதே நேரத்தில் மற்றொரு எம்எல்ஏ அனூப் தனக் நேற்று ராஜினாமா செய்தார். இவர்களில் பலர் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தாவ வாய்ப்புள்ளது. நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 5 இடங்களில் வெற்றி பெற்றது.

முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா தலைமையிலான ஜேஜேபி., கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ராம்நிவாஸ் சுர்ஜகேரா மற்றும் ஜோகி ராம் சிஹாக் ஆகிய இரு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று முன்பு சபாநாயகரிடம் கோரியது. அவர்கள் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். மற்றொரு எம்எல்ஏவான ராம்குமார் கவுரம், கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்

ஜேஜேபி கட்சிக்கு சட்டசபையில் உள்ள 10 எம்எல்ஏக்களில், தற்போது துஷ்யந்த் சௌதாலா, அவரது தாயார் நைனா சௌதாலா மற்றும் அமர்ஜித் தண்டா ஆகியோர் மட்டுமே இப்போது அக்கட்சியில் எஞ்சியுள்ளனர். மற்ற 7 பேர் கட்சியிலிருந்து விலகிவிட்டனர்.

ஹரியானாவில் 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அக்டோபர் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

உக்லானா எம்.எல்.ஏ.வான அனூப் தனக், பாஜக-ஜே.ஜே.பி கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். எனவே அவர் பாஜகவில் சேர வாய்ப்புள்ளது. ஈஸ்வர் சிங், ராம்கரன் கலா மற்றும் தேவேந்திர பப்லி ஆகியோர் காங்கிரஸில் சேர வாய்ப்புள்ளது.

முன்னதாக பாஜக கூட்டணியில் ஜேஜேபி கட்சி இணைந்து ஆட்சியமைக்க உதவியது. இதனால் துஷ்யந்த் சௌதாலா துணை முதல்வராக்கப்பட்டார். ஜேஜேபி கட்சி சில மாதங்களுக்கு முன்பு பாஜக அரசுக்கான தனது ஆதரவை திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE