வாராணசி | மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடியன் வேட்புமனு நிராகரிப்பு

By KU BUREAU

வாராணசி: வாராணசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட முயன்ற காமெடியன் ஷ்யாம் ரங்கீலாவின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

மிமிக்ரி கலைஞரான ஷ்யாம் ரங்கீலா, பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போன்ற அரசியல்வாதிகளை மிமிக்ரி செய்து பிரபலமானவர். 28 வயதாகும் இவரது நையாண்டிகளால் இவரது நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. 2014 தேர்தலின்போது பாஜகவை ஆதரித்த இவர், 2022ம் ஆண்டு ராஜஸ்தான் ஆம் ஆத்மியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப்போவதாக அறிவித்த இவர் அதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில்தான் அவரது வேட்புமனுவை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

காரணம் என்ன?: ஷ்யாம் ரங்கீலா தாக்கல் செய்த தேர்தல் பிராமண பத்திரத்தில் குறைகள் இருந்ததாலும், வேட்புமனுத் தாக்கலின்போது பின்பற்றப்படும் சத்தியப்பிரமாணம் செய்வது போன்ற நடைமுறை சம்பிரதாயங்களை பின்பற்றவில்லை என்பதாலும் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்புமனு நிராகரித்தது தொடர்பாக பேசியுள்ள ஷ்யாம் ரங்கீலா, “வேட்புமனு தாக்கல் செய்ய எனது வழக்கறிஞரை என்னுடன் தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. என்னை தனிமைப்படுத்தினர். என் நண்பரை தாக்கினர்.

நேற்று 27 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இன்று 32 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா?.” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE