‘போராட்டம் முடியவில்லை’- உற்சாக வரவேற்புக்கு பின் கண்ணீர் மல்க கூறிய வினேஷ் போகத் 

By KU BUREAU

புதுடெல்லி: பாரிஸில் இருந்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் சனிக்கிழமை நாடு திரும்பினார். டெல்லி வந்த தன்னை வரவேற்க வந்த அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களைப் பார்த்து கண் கலங்கிய வினேஷ், மக்களின் நிலையான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தனது போராட்டம் இன்னும் முடிவடைய வில்லை என்றார். அவரை சக வீரர்கள் சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் வந்து வரவேற்க அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தார்.

பாரிஸில் இருந்து இன்று நாடு திரும்பிய வினேஷ் போகத்துக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் ஹூடா, சக மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் வினேஷ் போகத்தை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர். பின்பு அவர் வாகனத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். மிகவும் சோர்வாக காணப்பட்ட அவருக்கு நண்பர்கள் பலரும் ஆறுதல் கூறியபடி உடன் சென்றனர். என்றாலும் அவர் சில தருணங்களில் கண்ணீர் விட்டு அழுதார்.

அப்போது பேசிய வினேஷ், "ஒட்டு மொத்த தேசத்துக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என்னுடைய போராட்டத்தில் எனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி. போராட்டம் இன்னும் முடியவில்லை., அது தொடரும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். போட்டிக்கு முன்பாக நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் பெறுவதை உறுதி செய்திருந்தார். எனினும், தகுதி நீக்கம் காரணமாக அவரால் போட்டியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்து, தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், வெள்ளிப் பதக்கத்தை தனக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நடுவர் மன்றம், கடந்த 14-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE