புதுடெல்லி: கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மூன்று மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (ஆக.16) தேதி ஒப்புதல் அளித்துள்ளது. அதன் மொத்த மதிப்பு ரூ.30,765 கோடியாகும்.
ரூ.15,611 கோடி மொத்த திட்ட மதிப்பு கொண்ட பொங்களூரு மெட்ரோ ரயில் திட்டம் - 3ன் இரண்டு வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல் வழித்தடம், ஜே.பி. நகரில் 4வது நிலையில் இருந்து, கெம்பபுரா வரை, 21 நிறுத்தங்கள் வழியாக செல்கிறது. இரண்டாவது வழித்தடம், ஹோசஹள்ளியிலிருந்து 9 நிலையங்ளை இணைக்கிறது. இந்த திட்டங்கள் 2029 -ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும்.
மொத்தம் ரூ.12,200 கோடி மதிப்பு கொண்ட தானே ஒருங்கிணைந்த ரிங்க் ரோடு ரயில் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம், நவுபாடா, வாக்லே எஸ்டேட், டொங்ரிபாடா, ஹிராநந்தனி எஸ்டேட், கோல்ஷெட், ஸ்கேட் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது.
அதேபோல் புனே மெட்ரோ 1வது கட்டத் திட்டத்தை தெற்கே ஸ்வார்கேட் முதல் கட்ராஜ் வரை 5.46 கிலோ மீட்டர் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த திட்ட மதிப்பு ரூ.2,954.53 கோடி, இத்திட்டமும் 2029ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்.
» கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தி முதல்வர் மம்தா பேரணி
மத்திய அமைச்சரவை ஒப்புதல்களுக்கு பின்னர் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "இவை பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதோடு வாழ்க்கையையும் எளிதாக்குகிறது. மகாராஷ்டிரா நவீன உள்கட்டமைப்பு வசதிகளைப் பெறுவதை உறுதி செய்வது எங்களின் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒன்று. தானே திட்டம், ஒரு முக்கியமான உள்கட்டமைப்பு திட்டமாகும். அது தானே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் வசதிகளை மேம்படுத்தும்.
அரசு புனேவை நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய மையமாக பார்க்கிறது. மேலும் நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தொடர்ந்து நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.