சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்துக்குள் வழக்குப் பதிய வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

By KU BUREAU

புதுடெல்லி: மருத்துவமனை வளாகம் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது வன்முறை நடந்த 6 மணி நேரத்துக்குள் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீதான வன்முறை சமீபத்தில் அதிகரித்துள்ளது. பணியின் போது மருத்துவப் பணியாளர்கள் பலர் தாக்கப்படுகின்றனர். பலருக்கு நோயாளிகள் அல்லது அவர்களுடன் இருக்கும் உறவினர்கள் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் மருத்துவமனை வளாகத்துக்குள் நடைபெற்றால், அதிகபட்சம் 6 மணி நேரத்துக்குள் புகார் அளித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு செய்யவில்லை என்றால் அதற்கு மருத்துவமனை நிர்வாக தலைவர் பொறுப்பேற்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. கொல்கத்தா மருத்துவமனை நிர்வாகத்தில் பல குறைபாடுகள் இருந்ததாக கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெற்றோர் தெரிவித்தனர். இதற்காக மேற்குவங்க அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் மாநில அரசும், தாங்கள் கவனக் குறைவாக செயல்படவில்லை என தெரிவித்தது.

பெண் மருத்துவர் இறந்துகிடந்தபோது, தற்கொலையாக இருக்கலாம் என போலீஸார்முதலில் தெரிவித்துள்ளனர். பெண்மருத்துவரின் உடலைப் பார்க்கஅவரது பெற்றோர் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் பெண் மருத்துவரின் உடலில் பல இடங்களில் கொடூரமான காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்குப்பின் போராட்டம் நடத்தியவர்கள், கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனையை சேதப்படுத்தினர். 7,000 பேர் ஒரு இடத்தில் ஒன்றுகூட அனுமதித்தது ஏன் என போலீசாரிடம் கொல்கத்தா உயர்நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியது.

இந்நிலையில் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், 6 மணி நேரத்துக்குள் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE