மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு... தொழிலதிபரின் பிரமாணப் பத்திரத்தால் பரபரப்பு!

By காமதேனு

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது நாடாளுமன்ற மின்னஞ்சல் முகவரியையும், கடவுச்சொல்லையும் தனக்கு கொடுத்தார் என்று நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவிடம் பிரமாணப் பத்திரம் மூலம் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி தெரிவித்துள்ளார். மேலும், தேவைப்படும்போது மஹுவா சார்பாக தன்னால் கேள்விகளை வலைதளத்தில் நேரடியாக கேட்க முடிந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினார் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மீது கூறப்பட்ட புகார் தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரத்தின் முக்கியமானவராக கருதப்படும், தற்போது துபாயில் வசித்து வரும் ஹிராநந்தனி குழுமங்களின் செயல் தலைவர் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி, நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவுக்கு இதுகுறித்து பிரமாணப் பத்திரம் அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்த பிரமாணப் பத்திரத்தில், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை தாக்குவதற்கு, கவுதம் அதானி குறித்து கேள்விகள் கேட்பது மட்டுமே ஒரே வழி என்று மஹுவா நினைத்தார். அவர் நாடாளுமன்றத்தில் அரசை சங்கடத்துக்குள்ளாக்கும் சில கேள்விகளை எழுதி வைத்திருந்தார். அவர் எனக்கு அவரது நாடாளுமன்ற வலைதள மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை பகிர்ந்திருந்தார். அதன்மூலம் நான் அவருக்கு தகவல்கள் அனுப்பினேன். அவர் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பினார். அதானி குழுமம் குறித்து கேள்விகள் எழுப்ப தனக்கு தொடர்ந்து உதவுமாறு கேட்டுக்கொண்டார். அதற்காக தனது கடவுச்சொல்லை எனக்குப் பகிர்ந்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவருக்காக நான் அவரது கணக்கில் நேரடியாக கேள்விகள் கேட்டேன்" என்று தெரிவித்துள்ளார். 3 பக்கங்கள் கொண்ட இந்த பிரமாணப் பத்திரம் பின்னர் ஹிராநந்தனி குழுமக் குழுவினரால் ஊடகங்களுக்கு பகிரப்பட்டது.

இந்த பிரமாணப் பத்திரம் குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா பதில் அளித்துள்ளார். அதில், 'அந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்தால் எழுதப்பட்டது. அதில் கையெழுத்திடுமாறு அவர் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். அவர்கள் அவரது ஒட்டுமொத்த தொழில்களையும் இழுத்து மூடிவிடுவோம் என்று அவரது நிறுவனங்களில் சிபிஐ சோதனை நடத்தும், அரசு வழங்கும் அனைத்து தொழில்வாய்ப்புகளும் நிறுத்தப்படும், பொதுத்துறை வங்கிக் கடன்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் என்று மிரட்டியிருப்பார்கள்' என்று கூறியுள்ளார். மேலும், 'ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரம் 'லெட்டர்ஹெட்' இல்லாமல் வெள்ளைத் தாளில் எழுத்தப்பட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்க மாநிலத்தில் கிருஷ்ணா நகர் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா. இவர் அதானி குழுமம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் லஞ்சம் வாங்கியுள்ளதாக, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புகார் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் அவர் புகார் கடிதம் அனுப்பி இருந்தார்.

அந்தக் கடிதத்தில், 'மக்களவையில் மஹுவா மொய்த்ரா இதுவரை கேட்டுள்ள, 61 கேள்விகளில், 50 கேள்விகள், அதானி குழுமம் தொடர்பானவை. அதானி குழுமம் தொடர்பாக இந்த கேள்விகளை எழுப்ப, மற்றொரு நிறுவனத்திடம் இருந்து அவர் லஞ்சம் வாங்கியுள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் உள்ளன' என்று கூறியிருந்தார். அது தொடர்பான ஆதாரங்களையும் அவர் இணைத்திருந்தார். புகாரை பரிசீலித்த மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் இருப்பதால் இது குறித்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு மொய்த்ரா மீதான புகாரை வரும் 26-ம் தேதியன்று விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடகத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!

செம மாஸ்... நடுரோட்டில் தெறிக்க விட்ட ரஜினி... வைரலாகும் வீடியோ!

பிரபல நடிகை சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு! திரையுலகில் பரபரப்பு!

நாளை விண்ணில் பாய்கிறது 'ககன்யான்' சோதனை விண்கலன்... தொடங்கியது கவுண்டவுன்!

லெஸ்பியன்னு சொல்லு... கெத்தா இருக்கும்; சர்ச்சைக் கிளப்பும் ட்ரைலர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE