தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு வரவிருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு புதிய சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை, வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதில், தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எஃப்.ஆர்.டி.ஏ.), முதலாளியின் பங்களிப்பின் அடிப்படையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துடன் (ஈ.பி.எஃப்.ஓ) வரி விதிப்பில் சமநிலை வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. வரவிருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் இது தொடர்பான புதிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (என்.பி.எஸ்.) வருடாந்திர பகுதியை வரி இல்லாததாக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் என்.பி.எஸ். வருமானத்தை கொண்டிருந்தால், வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்பதை உறுதிசெய்வது, என்.பி.எஸ். பங்களிப்புகளை வட்டி மற்றும் ஓய்வூதியத்துடன் இணைக்கும் திட்டம் ஆகியவை பரிசீலனையில் உள்ளன.
இதேபோல், புதிய வரிவிதிப்பின் கீழ் என்.பி.எஸ். பங்களிப்புகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளது.
தற்போது, பிரிவு 80சிசிடி (1பி)-ன் கீழ் என்.பி.எஸ்-க்கு ஒரு தனிநபரின் பங்களிப்பு ரூ. 50 ஆயிரம் வரை பழைய வரி விதிப்பின் கீழ் வரி விலக்குக்கு தகுதி பெறுகிறது. ஆனால் புதிய வரி விதிப்பின் கீழ் தகுதி பெறவில்லை. பழைய வரிவிதிப்பில் பிரிவு 80 சி-ன் கீழ் வழங்கப்பட்ட ரூ.1.50 லட்சம் வரி நிவாரணத்திலிருந்து இந்த விலக்கு தனியாகும்.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பாகவும் அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஓய்வூதிய முறையை மதிப்பீடு செய்வதற்கும், மேம்பாடுகளை பரிந்துரைப்பதற்கும் நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையில் கடந்த ஆண்டு குழு அமைக்கப்பட்டது.
நிதிசார் தாக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்டத்தை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கான என்.பி.எஸ்.-ன் தற்போதைய கட்டமைப்பில் சாத்தியமான மாற்றங்கள் குறித்த நுணக்கங்களை டி.வி.சோமநாதன் குழு அரசுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.