ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

By KU BUREAU

புதுடெல்லி: ஜம்மு -காஷ்மீருக்கு மூன்று கட்டங்களாகவும், ஹரியாணாவுக்கு ஒரே கட்டமாகவும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் 3 கட்டமாக ஜம்மு - காஷ்மீருக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. அக்டோபர் 4ம் தேதி ஜம்மு - காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஹரியாணாவுக்கு அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 4ம் தேதியே ஹரியாணாவிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புது டெல்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் டாக்டர் சாந்து ஆகியோர் தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஹரியாணா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 3ம் தேதி முடிவடைகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சாசனத்தின் 370-வது பிரிவு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கப்பட்டது. மேலும் அம்மாநிலமானது, ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசால் பிரிக்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பான வழக்கில், செப்டம்பர் 30-க்குள் ஜம்மு காஷ்மீர் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE