கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையை கண்டித்து நள்ளிரவில் பேரணி: மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய 10 பேர் கைது

By KU BUREAU

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலையைக் கண்டித்து நள்ளிரவில் பெண்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆக. 8-ம் தேதி மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர் (31), பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா போலீஸிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெண் மருத்துவரின் படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சுதந்திரதினத்துக்கு முந்தைய இரவு கிராமப் பெண்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர். நகர்ப்புறங்களில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும், அலைபேசியின் டார்ச் லைட்-ஐ ஒளிரவிட்டும், “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று பெண்கள் கோஷமிட்டனர்.

ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், போராட்டக்காரர்கள் போல மருத்துவமனைக்குள் புகுந்தமர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது.

அங்கிருந்த மருத்துவ சாதனங்களை சேதப்படுத்தி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீதும் கல் வீசி தாக்கினர். இதில் 15 போலீஸார் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமுற்ற மருத்துவர்களில் 20 பேர் கொண்ட குழு மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸை நேற்று காலை சந்தித்து பாதுகாப்பு கோரியது. ஆளுநரை சந்தித்துப் பேசிய மருத்துவர்களில் பெரும்பாலானோர் பெண்களாக இருந்தனர். இந்நிலையில், மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், பெண் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் உறுதியளித்தார்.

இது தொடர்பாக ஆளுநர் தரப்பில் கூறப்பட்டதாவது: மேற்கு வங்கத்தில் ரவுடிகளின் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேற்குவங்கத்தில் தாங்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நடமாடலாம் என்கிற தன்னம்பிக்கை கிடைக்கும்வரையில் ‘அபயம் இல்ல’த்தில் மருத்துவர்கள் பாதுகாப்பாகத் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘அபயா இணையதளம்’ என்ற புதிய ஆன்லைன் தளத்தை ஆளுநர் அலுவலகம் உருவாக்கியுள்ளது.

இதில் பதிவேற்றப்பட்டுள்ள உதவி எண்ணுக்கு மருத்துவர்கள், பொது மக்கள் எந்நேரமும் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். இவ்வாறு கூறப்பட்டது.

இதற்கிடையில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையை தாக்கிய மர்ம கும்பலைச் சேர்ந்தவர்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா போலீஸ் நேற்று தெரிவித்தது.

உங்கள் பாதங்களில் விழத் தயார்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: இந்த கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தயார் என்று நானே கூறியிருந்தேன். இப்போது நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளதால், நிம்மதி பெருமூச்சு விடுகிறேன். இந்த படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் போராட்டக்காரர்களிடம் நான் மன்றாடுகிறேன். உங்கள் பாதங்களில் விழுந்தால் நீங்கள் சமாதானம் அடைவீர்கள் என்றால் அதற்கும் தயார். நீங்கள் போராடத் தொடங்கி ஐந்து நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை யாரும் உங்களைத் தடுக்கவில்லை. ஆனால், ஒரு குழந்தை, ஒரு கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழந்துவிட்டனர். எல்லோர் முன்னிலையிலும் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து போராட்டத்தைக் கைவிடுங்கள்.

இவ்வாறு மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE