ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் ராணுவ கேப்டன் வீர மரணம் அடைந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பாட்னிடாப் அருகே இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் தாக்குதலுக்கு பிறகு, நேற்றிரவு வனப்பகுதி வழியாக தோடா மாவட்டத்துக்குள் ஊடுருவினர்.
அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ராணுவ கேப்டன் தீபக் சிங் வீர மரணம் அடைந்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களின்படி, 'அசார் பகுதியில் நடைபெற்ற சண்டையில் 48 ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவைச் சேர்ந்த ராணுவ கேப்டன் தீபக் சிங் வீர மரணம் அடைந்தார். அப்பகுதியில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது' என்று கூறியுள்ளது.
» மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல்லில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!
» ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக புறக்கணிப்பு; அதிமுக பங்கேற்பு!
ஷிவ்கர்-அசார் பெல்ட் பகுதியில் இந்த சண்டை நடந்ததாக கூறியுள்ள ராணுவம், என்கவுன்ட்டரில் ஒரு தீவிரவாதி காயமடைந்திருக்கலாம் எனக் கூறியுள்ளது. மேலும், என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அசார் பகுதியில் ஒரு ஆற்றின் அருகே தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தேடுதல் பணியை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.