ஹிண்டன்பர்க் விவகாரம்: நாடு முழுவதும் ஆகஸ்டு 22ல் காங்கிரஸ் போராட்டம்! 

By KU BUREAU

புதுடெல்லி: அதானி குழும நிறுவனங்களுக்கு எதிரான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்கக் கோரியும், செபியின் தலைவர் மாதவி புரி புச் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் ஆகஸ்ட் 22 அன்று நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கட்சியின் அனைத்து பொதுச் செயலாளர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினர், இதில் கட்சி அமைப்பு சார்ந்த விஷயங்கள் மற்றும் பல்வேறு தேசிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வரவிருக்கும் மாநில சட்டசபை தேர்தல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், “காங்கிரஸ் சார்பில் ஆகஸ்ட் 22 அன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம். ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் அமலாக்க இயக்குனரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்.

தற்போது நாட்டில் நடக்கும் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றான ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதித்து போராட்டம் நடத்த ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. மோடி அரசு உடனடியாக செபி தலைவரை பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தவேண்டும். மேலும், செபி- ஹிண்டன்பர்க் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டது” என்று கூறினார்.

இந்த கூட்டத்துக்குப் பின்னர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘செபிக்கும் அதானிக்கும் இடையே உள்ள தொடர்பின் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளில் முழுமையான விசாரணை தேவை. பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் பணத்தை ஆபத்தில் ஆழ்த்த முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE