மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க தயார்: மம்தா அறிவிப்பு

By KU BUREAU

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கத் தயார் என முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் (மருத்துவமனை) முதுநிலை மருத்துவம் படித்து வந்த பெண் மருத்துவர் (பயிற்சி) கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அடுத்த நாள் காலையில் அவர் சடலமாக மீட்கப் பட்டார். பிரேதப்பரிசோதனையில், அவர் பாலியல்வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் (33) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெண் பயிற்சி மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மாநிலம்முழுவதும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவத்தைக் கண்டித்து திங்கள்கிழமை முதல் (நேற்று) காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுமாறு நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து உள்ளுறை மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு (எப்ஓஆர்டிஏ) வெளியிட்ட அறிக்கையில், “கொல்கத்தா மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து போராடும் அக்கல்லூரி மருத்துவர்களுக்கு ஆதரவாக திங்கள்கிழமை முதல் தேசிய அளவில் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடைபெறும்” என்றனர்.

இந்த வழக்கை சிபிஐ வசம்ஒப்படைக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் கூறும்போது,“மேற்கு வங்க காவல் துறை உலகிலேயே மிகவும் சிறந்து விளங்குகிறது. பெண் மருத்துவர் கொலைவழக்கில் தொடர்புடைய அனைவரையும் வரும் 18-ம் தேதிக்குள் போலீஸார் கைது செய்யவில்லைஎன்றால், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்” என்றார்.

கல்லூரி முதல்வர் ராஜினாமா: மருத்துவக் கல்லூரி முதல்வர்டாக்டர் சந்திப் கோஷ் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “நான் பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர் தண்டிக்கப்பட வேண்டும். நான் அவமானப்படுத்தப்படுகிறேன். உயிரிழந்த பெண் என் மகளைப் போன்றவர். நானும் ஒரு பெற்றோர்தான். பெற்றோர் என்ற வகையில் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE