தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆகியவற்றில் வழிபாடு நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான அழைப்பிதழ் நாடு முழுவதும் உள்ளவர்களுக்கு ராமர்கோயில் நிர்வாகத்தின் சார்பிலும், பாஜகவினர் சார்பிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி தமிழகம் வந்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி ஆலயத்திலும், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி ஆலயத்திலும் வழிபாடு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 2024-ம் ஆண்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டித் தொடர், தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, சென்னையில் இருந்து நேராக ராமேஸ்வரம் செல்கிறார். அங்கு சுவாமி தரிசனம் செய்யும் அவர், 20 அல்லது 21-ம் தேதிகளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் திருச்சி மாநகர போலீஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.