தேசிய கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By KU BUREAU

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் ஆகஸ்டு 15ல் நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று காலை வழக்குகளை விசாரிக்கத் துவங்கும் முன், சுதந்திர தினத்தை ஒட்டி குடியிருப்பு நல சங்கத்தில் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதை நாளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென பெண் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்தார்.

மேலும் தேசிய கொடி ஏற்றும் போது, போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். தேசிய கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது.தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானமான விஷயம். தேசிய கொடியேற்றுவதை தடுப்போர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம்” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE