வெளியுறவு முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் மறைவு

By KU BUREAU

புதுடெல்லி: முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் (95) காலமானார். ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் பிறந்தவர் நட்வர் சிங். இவர் கடந்த 1953-ம் ஆண்டு தனது 22-வது வயதில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியானார். சீனா, இங்கிலாந்து, போலந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தூதரக அதிகாரியாக பணியாற்றினார்.

கடந்த 1984-ம் ஆண்டு ஐஎப்எஸ் பணியிலிருந்து வெளியேறிய நட்வர் சிங் ராஜஸ்தானின் பரத்பூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி.யானார். கடந்த 1985-ம் ஆண்டு சுரங்கத்துறை இணை அமைச்சராக பணியாற்றினார். கடந்த 1986-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசில் அவர் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆனார்.

கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவரை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தார்.

இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக நட்வர் சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. மறைந்த நட்வர் சிங்குக்கு ஹெமிந்தர் குமார் சிங் என்ற மனைவியும், ஜெகத் சிங் என்ற மகனும் உள்ளனர். இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE