ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை - இரு ராணுவ வீரர்கள் காயம்

By KU BUREAU

ஜம்மு காஷ்மீர்: அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த தகவல் கிடைத்த நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அஹ்லான் கடோல் பகுதியை சுற்றிவளைத்து காவல்துறை மற்றும் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது கோகர்நாக் பகுதியில் உள்ள வனப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்டிருந்த போது, ​​அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

இதனையடுத்து வெளிநாட்டினர் என நம்பப்படும் பயங்கரவாதிகளை பிடிக்கும் நடவடிக்கையில் ராணுவத்தின் சிறப்புப் படைகள் ஈடுபட்டுள்ளன. அஹ்லான் கடோல் காடுகளில் முகாமிட்டுள்ள பயங்கரவாதிகளை பிடிக்க அப்பகுதிக்கு எல்லை பாதுகாப்புப் படை விரைந்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் கோக்கர்நாக்கில் நடந்த இரண்டாவது பெரிய என்கவுன்டர் இதுவாகும். செப்டம்பர் 2023ல், கோகர்நாக் காட்டில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது ஒரு கட்டளை அதிகாரி, ஒரு மேஜர் மற்றும் ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE