பெங்களூருவில் 190 கி.மீ சுரங்கப்பாதை சாலை... போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டம்!

By காமதேனு

பெங்களூருவில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் நகரில் 190 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்கப்பாதை சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதைக்கான வழிகாட்டி மேப் உள்பட முக்கிய விபரத்தை துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடகாவில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார். இவர் தான் பெங்களூர் நகர வளர்ச்சி துறையை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் தான் பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

பெங்களூர் நகரை பொறுத்தமட்டில் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஆண்டுதோறும் பெங்களூரை நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கையும், அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால்தான் பல முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு 4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி பெங்களூர் அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒரு கிலோமீட்டரை கடக்க 2 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் அந்த மாநில அரசுக்கு உள்ளது.

இந்நிலையில் தான் பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சுரங்கப்பாதை ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி துணை முதல்வரும், பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் கூறியதாவது, “பெங்களூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சுரங்கப்பாதைகள் அமைப்பது, சாலைகளை அகலப்படுத்துவது குறித்து ஆலோசித்து உள்ளோம். சர்வதேச டெண்டர் விட்டதில் 8 நிறுவனங்கள் கலந்துகொண்டன.

இந்த நிறுவனங்கள் சுரங்கப்பாதை குறித்து ஆய்வறிக்கை அளிக்க உள்ளன. அதன்பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். சுரங்கப்பாதை 4 வழிபாதையாக அமைக்க வேண்டுமா அல்லது 6 வழி பாதையாக அமைக்க வேண்டுமா?. எங்கு தொடங்கி எங்கு முடிக்க வேண்டும் என்பது பற்றியும் இந்த நிறுவனங்கள் ஆய்வு செய்யும். அதன்பிறகு இந்த திட்டத்தை பெங்களூர் நகர் முழுவதும் செயல்படுத்த வேண்டுமா என்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.

இதையடுத்து டெண்டரில் பங்கேற்றுள்ள நிறுவனம் தேர்வு செய்யப்படும். அதன்பிறகு அந்த நிறுவனம் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வழங்கும். இந்த பணி என்பது பல கட்டங்களாக நடக்கிறது. மொத்தம் 190 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம் என்பது மிகப்பெரியது. இதற்கு நிதித்தேவை என்பது அதிகமாக உள்ளது. இதனால் மத்திய அரசிடமும் உதவி கேட்போம். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் ஏற்கனவே விவாதித்துள்ளேன். அப்போது அவர் சாதகமான பதிலை அளித்தார்.

தற்போது திட்டமிடப்பட்டுள்ள 190 கிலோமீட்டர் சுரங்கப்பாதை பணிக்கு பல்லாரி ரோடு, பழைய மெட்ராஸ் ரோடு, எஸ்டீம் மால் சந்திப்பு முதல் மேக்ரி சர்க்கிள் வரை, மில்லர் ரோடு, சாளுக்கிய சர்க்கிள், ட்ரினிட்டி சர்க்கிள், சர்ஜாபூர் ரோடு, ஓசூர் ரோடு, கனகபுரா ரோடு - கிருஷ்ணா ராவ் பார்க், மைசூர் ரோடு - சிர்சி சர்க்கிள், மாகடி ரோடு, துமகூரு ரோடு தல் யஷ்வந்த்பூர் சந்திப்பு வரை, வெளிவட்ட சாலை, கொரகுண்டேபாளையா, கேஆர்புரம், சில்க்போர்டு பகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். இந்த பகுதிகளில் தான் முன்னுரிமை அடிப்படையில் சுரங்கப்பாதை திட்டம் செயல்பாட்டு வருகிறது. இந்த பகுதிகளில் டெண்டர் நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை வழங்கிய பிறகு திட்டம் இறுதி வடிவம் பெறும்'' என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்

விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

கவின் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE