பொதுமக்கள் முன்னிலையில் தங்கையை கொலை செய்த அண்ணன்: வைரலாகும் வீடியோ

By KU BUREAU

இந்து மதத்தைச் சேர்ந்தவரை காதலித்ததால் பொதுமக்கள் முன்னிலையில் தங்கையை கழுத்தை நெரித்து அண்ணன் கொலை செய்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம், நாக்லே ஷேகு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹசீன்(20). எலெக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது16 வயது சகோதரி அதே கிராமத்தைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞனை காதலித்தாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் அந்த இளைஞனுடன் அந்த சிறுமி வீட்டை விட்டு சமீபத்தில் ஓடியுள்ளார். சிறுமி மைனர் என்பதால் அவர்கள் இருவரையும் போலீஸார் அழைத்து வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், சிறுமிக்கு வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், தனது காதலனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அந்த சிறுமி உறுதியாக இருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று மீண்டும் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேற அந்த சிறுமி முடிவு செய்தார். இதனால் அந்த சிறுமியைத் தடுக்க அவரது சகோதரர் ஹசீன் முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரது பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியே சிறுமி ஓடியுள்ளார்.

அதனால் அவரது சகோதரர் சிறுமியை துரத்திச் சென்று நடுரோட்டில் வைத்து அடித்துள்ளார். இதன் பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் கழுத்தை நெரித்துள்ளார். இந்த காட்சியை மக்கள் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்துள்ளனர். யாரும் இந்த குற்றத்தைத் தடுக்க முன்வரவில்லை. சில குழந்தைகளும் இந்த கொலை நடப்பதை வேடிக்கை பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து ஹசீனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது தங்கை மூன்று முறை வீட்டை விட்டு ஓடி தந்தையை அவமதித்ததால் கொலை செய்ததாக கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE