சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 23 ராணுவ வீரர்கள் மாயமாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள லேசன் பள்ளத்தாக்கில் உருவாகும் டீஸ்டா ஆற்றில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக டீஸ்டா ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக கேங்டாக் மாவட்டத்தில் சுமார் 30 கிலோமீட்டருக்கும் மேலான தூரத்திற்கு கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. தெற்கு லோனார்க் ஏரியில் ஏற்பட்ட இந்த மேகவெடிப்பு காரணமாக, ஏரியின் கரைகள் உடைந்து தண்ணீர் டீஸ்டா ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பலுடார் கிராமத்தில் நதியின் மீது கட்டப்பட்டிருந்த இணைப்பு பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிங்க்டான் நகர் உட்பட 3 இடங்களில் பாலங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்திற்கு வீடுகள் சாலைகள் மற்றும் பாலங்கள் என ஏராளமான சேதத்தை இந்த வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, நதியின் கீழ் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டீஸ்டா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சேதங்களை மதிப்பிடவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மாநில அரசு சார்பில் அவசரகால தொடர்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அணைகள் மிகவும் மோசமாக சேதம் அடைந்து இருப்பதால் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. ஏராளமான நிவாரண முகாம்களை திறந்துள்ள மாநில அரசு தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே சிக்கிமில் பாதுகாப்பு பணியில் இருந்த 23 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி இருப்பதாக, ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களை தேடும் பணியில் ராணுவத்தினரும், துணை ராணுவ படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராணுவ வீரர்களுடன் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த தொழிலாளர்களும் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.