புதுடெல்லி: பிரதமர் பதவியை ராஜினாமாசெய்துவிட்டு வங்கதேசத்தி லிருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா எந்த நாட்டில் தங்கப் போகிறார் என்பது குறித்து அவரது மகனும், ஆலோசகருமான சஜீப் வசீத் ஜாயிடம் ஜெர்மனியின் ஒரு செய்தி நிறுவனம் கேள்வி எழுப்பியது. அப்போது ஜாய் கூறியதாவது:
அடைக்கலம் தேடுவது தொடர் பான செய்திகள் அனைத்தும் வதந்திகள் மட்டுமே. அதுபற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. அதுவரை அவர் டெல்லியில்தான் சிறிது காலம் தங்கப்போகிறார். அம்மா ஷேக் ஹசீனாவுக்கு உறு துணையாக எனது சகோதரி உள்ளார். ஏனெனில் அவர் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குநராக உள்ளார். அவரது தலைமையகம் டெல்லியில்தான் உள்ளது. இதனால், ஷேக் ஹசீனா அங்கு தங்குவதில் பிரச்சினை இருக்காது. இவ்வாறு ஜாய் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் புகலிடம் கோர ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இந்த கோரிக்கையை பரிசீலிக்க அந்த நாடுகள் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. அந்த நாடுகள் அடைக்கலம் தர மறுக்கும்பட்சத்தில் பின்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை ஷேக் ஹசீனா பரிசீலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது