மரித்த மனிதநேயம்: விபத்தில் சிக்கியவரை காப்பாற்றாமல் மக்கள் செய்த காரியம்!

By KU BUREAU

காசியாபாத் - மீரட் விரைவுச் சாலையில் பால் டேங்கர் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானது. இதில் விபத்தில் சிக்கிய ஓட்டுநரை காப்பாற்றாமல் சாலையில் கொட்டிய பாலை பொதுமக்கள் பிடித்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தின் மீரட் விரைவு சாலையில் நேற்று சென்ற பால் டேங்கர் மீது லாரி மோதியது. இதனால் பால் வண்டியில் இருந்து பால் சாலையில் கொட்ட ஆரம்பித்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற மனிதநேயம் கூட இல்லாமல் பானை, பாட்டில், பாத்திரங்களுடன் பொதுமக்கள், டேங்கரில் இருந்து கொட்டிய பாலைப் பிடிக்க போட்டி போட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரேம் சாகர்(45) என்ற பால் டேங்கர் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், காயத்துடன் இருந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான பிரேம் சாகர் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE