குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற திமுக பெண் கவுன்சிலர்: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

By காமதேனு

தன் கணவரை கொலைவழக்கில் பொய்யாக சேர்த்திருக்கிறார்கள் என்று கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் திமுக கவுன்சிலர் துர்காதேவி. இவர் இன்று தன் குடும்பத்தினருடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென தர்ணாவில் ஈடுபட்ட 6 பேர் தங்கள் மேல் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை போலீஸார் தடுத்தி நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது துர்காதேவி கூறுகையில், நான் தற்போது அனிச்சங்குப்பம், கீழ்ப்புதுப்பட்டு ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறேன். என் கணவர் கலைஞர் என்கிற நாகராஜ் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நான் கவுன்சிலராக வெற்றி பெற்றதால் என்னை எதிர்த்து போட்டியிட்டவர்கள், விமல்ராஜ் என்பவர் கொலைவழக்கில் என் கணவரை சம்பந்தப்படுத்தி குற்றவாளியாக சேர்க்க முயற்சிக்கிறார்கள்.

கோட்டக்குப்பம் போலீஸார் சரிவர விசாரிக்காமல் அதை உண்மை எனக் கருதி என் கணவரை அந்த வழக்கில் குற்றவாளியாக சேர்த்தது மனித உரிமை மீறிய செயலாகும்" என்றார்.

போலீஸாரைக் கண்டித்து திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE