“புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்துவைக்க வேண்டும்” என்று முக்கிய எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரண்டு விழாவை புறக்கணித்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசனிடம் பேசினோம்.
புதிய பாராளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் குடியரசுத் தலைவரை முன்னிறுத்தவில்லை என்பதற்காக அந்த விழாவை புறக்கணிக்கத்தான் வேண்டுமா?
பாராளுமன்றம் மக்களுக்கு உரியது; ஒரு கட்சிக்கானது அல்ல. அது எங்களுக்கு தெரியாத விஷயமும் இல்லை. இருந்தும் பெரும்பாலான கட்சிகள் விழாவைப் புறக்கணித்திருக்கிறோம். அதற்குக் காரணம், நிர்பந்தம். அதை எங்களுக்குள் உருவாக்கியதும் மோடி அரசுதான்.
நாடாளுமன்றம் என்பதே குடியரசுத் தலைவர், இரு அவைகளை உள்ளடக்கியது என்றுதான் அரசியலமைப்புச் சட்டம் சொல்கின்றது. அப்படி இருக்கையில் நாடாளுமன்றக் கட்டிடத்தைக் குடியரசுத் தலைவரை வைத்துத் திறப்பதுதான் சரியானது. ஆனால் அந்த வேண்டுகோளை, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பரிசீலிக்கவே இல்லை.
விழாவில் கலந்துகொள்ளும்படி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த தருணத்திலேயே, பிரதமர் நரேந்திரமோடி, “புறக்கணிப்பது நாகரிகம் இல்லை” என எதிர்கட்சிகளைச் சாடினார். இன்னொன்று, சாவர்க்கர் பிறந்த நாளில் திறப்புவிழாவுக்கு தேதி குறித்தது. சாவர்க்கர் விடுதலைப் போராட்ட வீரரா இல்லையா? என்னும் சர்ச்சையே முடிவுக்கு வரவில்லை. அவர் பிரிட்டீஷாருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதித் கொடுத்ததாரா இல்லையா என்ற விவாதம் இன்னமும் முடியவில்லை.
இப்படியான சூழலில் அவர்களின் நிலைப்பாட்டை உறுதிசெய்து கொள்ளும் நோக்கிலேயே திறப்பு விழாவுக்கு நாள் குறித்திருக்கிறார்கள். காந்தி படுகொலை தொடர்பாக வெளியான பல புத்தகங்களில், கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதில் சாவர்க்கருக்கும் பங்கு உண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டத்திலும் ஆர்எஸ்எஸ் பங்கேற்கவில்லை.
இத்தனை சிக்கல்கள் இருந்தும் சாவர்க்கர் பிறந்த நாளில் நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறக்க மெனக்கிட்டனர். மோடி தலைமையிலான அரசிடம் ஜனநாயகம் இல்லை. எந்த ஒன்றிலும் மூர்க்கத்தனமாகவே முடிவு எடுக்கின்றனர். குடியரசுத் தலைவரை வைத்துத் திறங்கள் என்று எதிர்க்கட்சிகள் சொன்னால் அதற்கு விளக்கம்தர வேண்டும். ஆனால், அத்தகைய ஜனநாயகத்தன்மை அவர்களுக்கு இல்லை.
பாராளுமன்றத்தின் நடுக்கூடத்தில் சோழர்களின் மாதிரி செங்கோல் வைப்பது தமிழுக்கும் தமிழகத்திற்கும் பெருமைக்குரியதாகப் பார்க்கப்படுகிறதே... இந்நிகழ்வையும் தானே இதன்மூலம் புறக்கணிக்கிறீர்கள்?
அதன் பின்னால் இருக்கும் அரசியல் நுட்பமானது. குடியரசுத் தலைவர் திறந்துவைக்க வேண்டும். வீர சாவர்க்கரின் பிறந்தநாளில் திறக்கக்கூடாது என்ற எதிர்க்கட்சிகளின் கருத்தியலைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தமிழகத்தில் இருந்து செங்கோல் சென்றதை முன்னிலைப்படுத்தி, விவாதத்திற்குரிய விஷயத்தைப் பின்னுக்குத் தள்ளுகின்றார்கள். இது அவர்களின் ராஜதந்திரம்.
ஈராண்டை நிறைவு செய்திருக்கும் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மீது உங்கள் மதிப்பீடு என்ன?
கடுமையான நிதி நெருக்கடியோடு ஒன்றிய அரசின் பாராமுகமும் சேர்ந்துகொண்டது. கொரோனா இரண்டாவது அலையின் உக்கிரம் வேறு! இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்றது. அதனாலேயே புதிய அமைச்சரவை பொறுப்பேற்பைக் கூட பெருவிழாவாக நடத்தவில்லை. கொரோனாவை எதிர்கொள்ள அதிகபட்சம் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்திருக்கிறார்கள். அதில் அரசு மருத்துவமனைகளே பெரும்பங்கு செய்தது. உயிரைப் பணயம் வைத்து அரசு சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றினர்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க 5,000 ரூபாய் தரவேண்டும் என கேட்டிருந்தார் ஸ்டாலின். எடப்பாடி அரசு 1,000 ரூபாய் கொடுத்து இருந்தது. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் மீதம் 4,000 ரூபாயை, அவர் சொன்ன தேர்தல் வாக்குறுதி போல் இரு தவணையாகக் கொடுத்தார். கடும் நிதி நெருக்கடியில் இதைச் செய்தார். பெண்களுக்கு கட்டணமில்லா பயண அனுமதி உள்பட சில மக்கள் நலத்திட்டங்கள் நிதி நெருக்கடிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் திமுக கொடுத்த வாக்குறுதிகள் பல இருக்கிறது. அதையும் படிப்படியாக செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
மு.க.ஸ்டாலின் அரசிடம் நான் ஒருவிஷயத்தைப் பெருமையாகக் கருதுகின்றேன். ஜனநாயகபூர்வமாகச் செயல்படுவதுதான் அது! குறிப்பாக, 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றி பேரவையிலேயே மசோதாவும் நிறைவேற்றிவிட்டார்கள். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. உடனே, காலையில் தொழிற்சங்கக் கருத்துக் கேட்பு, மாலையிலேயே அனைத்து கட்சிக் கூட்டத்தையும் நடத்தி அதை உடனே நிறுத்திவைப்பதாக அறிவித்தாரே இது சாதாரண விஷயமா? இதை ஒன்றிய அரசோடு ஒப்பிட்டுப்பாருங்கள்.
விவசாயிகளுக்கு எதிராக மூன்று மசோதாக்களை அவர்களே நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அதை அரசிதழில் வெளியிட்டு உடனே அமலும் செய்கிறார்கள். அதைத் திரும்பப்பெற வைக்க ஒன்றேகால் ஆண்டுகள் போராடியிருக்கின்றோம். 700 பேர் அந்தப் போராட்டத்தில் உயிர் நீத்திருக்கிறார்கள். ஜனநாயகத்தின் மாண்பு ஒன்றியத்தில் எப்படி இருக்கிறது பாருங்கள்! ஜனநாயகத்தின் உயர்ந்த மதிப்பீடுகள் மு.க.ஸ்டாலினிடம் இருக்கிறது. தமிழக அரசைப் பார்த்து மோடி ஜனநாயகத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
மேகேதாட்டு விவகாரம் தொடங்கி இட ஒதுக்கீடு பிரச்சினை வரை சட்டமன்றக் கட்சி தலைவர்களை அழைத்துப்பேசி, மு.க.ஸ்டாலின் ஜனநாயகபூர்வமாகத் தீர்வுகாண முயன்றார். திமுக அரசிடம் ஒரு ஜனநாயகம் இருப்பது நல்லவிஷயம். மக்களிடம் இந்த அரசு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு உள்ளது. அவற்றை நிறைவேற்றவேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. நிறைவேற்றவேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடும், கோரிக்கையும்!
செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகள் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக குற்றம் சாட்டுகிறதே?
பொதுவாக தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதை யாரும் ஆட்சேபிக்கமுடியாது. அதேசமயம், கடந்த சில வருடங்களாக அமலாக்கத்துறையும், வருவாய்த்துறையும் எப்படி பயன்படுத்தப்படுகின்றது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகள் யாருமே இருக்கக்கூடாது என நினைக்கிறது. அதானி விவகாரத்தை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கேட்டன. ஆனால், அப்படி எல்லாம் விசாரிக்க மாட்டோம் என்று பிடிவாதமாக நின்றதால் பாராளுமன்றக் கூட்டமே முழுமையாக நடக்காமலே போனது. ஒவ்வொரு கட்சியும் தன் சொல்லுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதைக் கையாளும் ஆயுதமாகவே இந்த அமைப்புகளை பயன்படுத்துகிறது பாஜக அரசு.
வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் பிரதமரோ, நாடாளுமன்றமோ அமைத்தது இல்லை. இதெல்லாம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமைத்துக் கொடுத்தது. அந்த அமைப்புகள் ஜனநாயகபூர்வமாக செயல்பட பரிபூரண உரிமைகள் உண்டு. நான் பகிரங்கமாகச் சொல்கின்றேன்... நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அத்தனையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது. நான் குற்றம் செய்து இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், நான் எதிர்க் கருத்துச் சொல்கிறேன் என்பதாலேயே பழிவாங்குவதை ஏற்கமுடியாது.
எதிர்கட்சிகளை ஒடுக்குவதே ஒன்றிய அரசின் இலக்காக உள்ளது. இப்போது என்மீதோ, எங்கள் தோழர்கள் மீதோ வருமான வரி சோதனையை ஏவினால் என்ன ஆகும் எனத் தெரியும். இவர்கள் நம்மை எதிர்க்கிறார்கள். இவர்களைப் பழிவாங்க வேண்டும் என எங்கள் கட்சியின் தேசிய அளவிலான தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை ரத்து செய்கிறார்கள். அது தேர்தல் ஆணைய விதிப்படி சரியான நடவடிக்கைதான். அந்தவகையில் இதைச் சட்டப்படி செய்தாலும்கூட, அதை பத்து ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க முடியும். ஆனால் அவர்களை தீவிரமாக எதிர்ப்பதாலேயே இப்போது அதைச் செய்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவர்களின் பழிவாங்கும் போக்கு பட்டவர்த்தனமாக இருக்கிறது.
தேசிய அளவிலான அங்கீகாரத்தை ஒரே ஒரு தேர்தலை வைத்து முடிவுசெய்யக்கூடாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925-ல் தொடங்கியது. விடுதலைக்கு பாடுபட்ட கட்சி. ஜனநாயகரீதியாக அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் கட்சி என்றுதான் முந்தைய காலங்களில் வாக்கை மட்டும் அளவுகோளாக எடுக்கவில்லை. ஆனால் இப்போது, தவறான நோக்கத்துடன் எங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்திருக்கிறார்கள். செந்தில் பாலாஜி உறவினர் இல்ல சோதனைகளையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன்.
விஷச் சாராய மரணங்கள், விஏஓ கொலை என தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கின் நிலை பற்றியும் பெரும் விவாதம் எழுந்துள்ளதே?
கொலை உள்ளிட்டவை நடக்கத்தான் செய்கிறது. அது யாரையும் கேட்டு நடப்பதில்லை. ஏதோ ஒரு சூழலில் நடந்துவிடுகிறது. உடனடியாக அதன்பேரில் நடவடிக்கை எடுத்துவிடுகின்றனர். ஆனால், சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதற்கு ஒரு அளவீடு இருக்கின்றது. அதாவது, விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கும்போது அரசு கண்மூடித்தனமாக இருந்தால் தான் அந்த வார்த்தையைச் சொல்லமுடியும். ஆனால், தமிழகத்தில் அப்படியான நிலைமை இல்லை.
விஷச் சாராய சம்பவங்களால் அரசுக்குக் கெட்டபெயர் வந்துள்ளதா என்றால் ஆமாம் தான். அதேநேரத்தில் அரசு உடனே ஒரு எஸ்பி-யையே சஸ்பெண்ட் செய்தது. முதல்வரே நேரடியாக களத்துக்குப் போய் பார்த்தார். இறந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத்திலும் இருவகையான கருத்துகள் சொல்லப்பட்டாலும் அவர்களின் குடும்ப நலன் கருதி நிவாரணம் வழங்கினார். சட்டம் - ஒழுங்கு பற்றி பேச அதிமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தையே டிவியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டதாகச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி!