திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் எனப்படும் அமீபா மூளைக்காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் இந்த நோயால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரா தாலுகாவில் உள்ள நெல்லிமூடு பகுதியில் இருந்து மேலும் 4 பேருக்கு அமீபா மூளைகாய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சுகாதாரப் பணிகள் கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் நெல்லிமூடு பகுதியைச் சேர்ந்த அகில் (27) என்பவர் கடந்த மாதம் 23ம் தேதி உயிரிழந்தார். அவர் அமீபா மூளைக்காய்ச்சலில் உயிரிழந்ததை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அகிலுடன் குளத்தில் குளிக்க சென்ற அவருடைய நண்பர்கள் 4 பேர் அனிஷ் (26), அச்சு (25), ஹரிஷ் (27), தனுஷ் (26) ஆகியோர் மூளை காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே தேங்கி நிற்கும் நீர்நிலைகளில், குறிப்பாக பாசிகள் வளர்ந்துள்ள நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்குமாறு அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.
» எடப்பாடி காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - சேலத்தில் பரபரப்பு
» முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளிக்கு என்ன ஆச்சு?: வைரலாகும் வீடியோ
கேரள மாநிலத்தில் அமீபா நுண்ணுயிரியால் ஏற்படும் மூளையழற்சி பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. தேங்கி நிற்கும் அசுத்தமான தண்ணீரில் உள்ள அமீபா மூலம் உருவாகும் என்சபலிட்டிஸ் எனப்படும் மூளையழற்சி பாதிப்பு ஏற்படுகிறது. சுகாதாரமற்ற தண்ணீரில் குளிக்கும்போது சுவாசப் பாதைவழியே ஊடுருவிச் செல்லும் அந்த வகை அமீபா, நேரடியாக மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், வாந்தி, மயக்கம்,தலைவலி, மனக் குழப்பம், பிதற்றல், வலிப்பு போன்றவை முக்கிய அறிகுறிகள் ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.