மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய தந்தை வருவார் என்பதற்காக, விபத்தில் பலியான மகளின் உடலை அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்யாமல் வைத்துள்ள சம்பவம் மைசூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள கனககிரியைச் சேர்ந்தவர் நாகராஜு. இவரது மகள் கவனா(18). இவர் மைசூருவில் உள்ள பிஜிஎஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் தனது நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார். கூர்கல்லியில் உள்ள பெமல் எதிரே கவனா சென்றுக் கொண்டிருந்த பைக், சாலையில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பைக்கில் இருந்து கீழே விழுந்த கவனா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக கவனாவின் தந்தை நாகராஜு மூன்று மாதங்களுக்கு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. மகளின் மரணச்செய்தியைக் கேள்விப்பட்டு அவர் முகத்தைப் பார்க்கவாவது நாகராஜு வருவார் என்று அவரது குடும்பத்தினர் கவனாவின் உடலோடு காத்திருக்கின்றனர். எங்கிருந்தாலும் மகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வருமாறு அவரது குடும்பத்தினர் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.