சாதனை என்ன இருக்கிறது... வேதனையே மிஞ்சி இருக்கிறது!

By என்.சுவாமிநாதன்

"ஈடில்லா ஆட்சி...ஈராண்டே சாட்சி” என திமுக ஈராண்டு சாதனைகளைக் கொண்டாடிய நேரத்தில் அதற்கு திருஷ்டி வைத்தாற்போல் கள்ளச்சாராய உயிரிழப்புகள் திமுக அரசுக்கு பெரும் சவாலாக மாறிப் போனது. இப்படியான சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் காமதேனுவுக்காக சில கேள்விகளை முன்வைத்தோம். வழக்கம் போல் மடைதிறந்த வெள்ளம் போல் பேசத் துவங்கினார்.

கள்ளச்சாராய ஊறல்

திமுகவின் ஈராண்டு ஆட்சியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

ஈராண்டு ஆட்சி... தமிழகத்தின் இருண்ட ஆட்சியே அதற்குச் சாட்சி. சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. சாதாரணமாக பத்திரிகைகளைத் திருப்பினாலே கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல், அதிகாரத் துஷ்பிரயோகம், எதிர்கட்சியினரை பழிவாங்குவது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெருக்குவது, பொய் வழக்குப் புனைவது என வரிசை கட்டுகிறதே... இதில் சாதனை என்ன இருக்கிறது? வேதனையே மிஞ்சி இருக்கிறது.

மகளிருக்கு கட்டணம் இல்லா பேருந்துப் பயணம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட சாதனைகளும் திமுக அரசில் இருக்கிறதே..?

மக்களைப் பொறுத்தவரை ஒரு ஆட்சியின் மதிப்பீட்டை நிம்மதியாக இருக்கும் அளவீட்டை வைத்தே தீர்மானிப்பார்கள். முந்தைய அதிமுக ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை இன்று எப்படி ஆக்கியிருக்கிறார்கள்? பைக்கில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் இன்று காரில் வந்து செயின் பறிக்கிறார்கள். தனியாக இருக்கும் முதியோரைக் குறிவைத்து அவர்கள் வீடுகளில் கொள்ளை நடக்கின்றது. தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக இருந்தது. இப்போது காவலர்களே, ஏன் இந்தக் காக்கிச் சட்டையைப் போடுகிறோம் என கூனிக்குறுகுகிறார்கள்.

காவல்துறையை சுதந்திரமாக வேலை செய்யவும் விடவில்லை. ஆளும்கட்சியும், தோழமைக் கட்சியும் காவலர்களையும், அதிகாரிகளையும் மதிப்பதில்லை. விசிக நிர்வாகி ஒருவர் வட்டாட்சியரைத் திட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் சுற்றுகின்றதே? நேரு, திருச்சி சிவா விவகாரத்தில் காவல் நிலையமே சூறையாடப்பட்டது. திமுகவின் ஐடி விங்கில் இருப்பவர்கள் பெண் காவலரையே பாலியல் துன்புறுத்தல் செய்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் காவலர் ஒருவர் கொலை தொடங்கி, இப்போது விஏஓ கொலை வரை நடந்திருப்பதும் ஈராண்டில் தான்! டிஜிபி-யே காவலர்களை தனியாகச் செல்லாதீர்கள் என்கிறார். அப்படியானால் சாமானியர்களுக்கான பாதுகாப்பின் நிலை என்ன?

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுப்பதாக சொல்வதை சாதனை என்கின்றீர்களே? அப்படி கொடுக்கும் மனம் உள்ள முதல்வராக இருந்தால் உடனே அல்லவா கொடுத்திருக்க வேண்டும்? ஏன் அதை செப்டம்பருக்கு நகர்த்துகின்றார். வார்த்தைக்கு வார்த்தை, “நான் கலைஞரின் மகன்” என்று சொல்லும் மு.க.ஸ்டாலின், ஜூன் 3-ம் தேதி வரும் கருணாநிதியின் பிறந்தநாளில் இருந்தாவது இதைத் தொடங்கி இருக்கலாமே?

டிஜிபி சைலேந்திர பாபு

கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்ததுமே காவல்துறை ஒரேநாளில் நூற்றுக் கணக்கானவர்களைக் கைது செய்ததே..?

எந்த ஒன்றும் நடந்த பின்பே நடவடிக்கை எடுக்கின்றார்கள். தமிழகத்தில் கள்ளச்சாராயக் கலாச்சாரம் பெருகிவிட்டது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி மாதத்திலேயே குறிப்பிட்டு இருந்தார். அப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால் இத்தனை உயிர் இழப்புகள் ஏற்பட்டு இருக்காது. முன்கூட்டிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசு தான் இந்த மரணங்களுக்கு தார்மிக பொறுப்பேற்கவேண்டும்.

இப்போது, ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என விவரிக்கின்றார் சைலேந்திர பாபு. அப்படியானால் ஏற்கெனவே இவர்கள் எல்லாம் கள்ளச்சாராயம் விற்பது தெரியும் என்றுதானே அர்த்தம்? ஜெயலலிதா காலத்தில் எந்த கிராமத்திலாவது கள்ளச்சாராயம் காய்ச்சினால் அந்த கிராம நிர்வாக அலுவலரையும், இன்ஸ்பெக்டரையும் சஸ்பெண்ட் செய்துவிடுவார்கள். அதைத்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் தொடர்ந்தார். சஸ்பெண்ட் ஆகிவிடக் கூடாதென அதிகாரிகள் கண்கொத்திப் பாம்பாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களைக் கண்வைப்பார்கள்.

டாஸ்மாக் கடையை மூடுவதாகச் சொல்லி வாக்குறுதி கொடுத்தார்கள். எதிர்கட்சியாக இருக்கும்போது கருப்பு சட்டையைப் போட்டுக்கொண்டு ஆங்காங்கே பதாகை பிடித்தெல்லாம் நின்றார்கள். தமிழர்களுக்குக் குடிக்கக் கற்றுக்கொடுத்ததே திமுகதான். அதுவும் கருணாநிதிதான்! இப்போது தமிழகம் குடியின் உச்சமாகிவிட்டது. வேறுவழியில் வருவாயைப் பெருக்கும்வழி இந்த அரசாங்கத்திற்குத் தெரியவில்லை. அதற்கான புத்தியும் திமுகவுக்கு இல்லை.

நிர்வாகத்திறமையே இல்லாமல் டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே சார்ந்து உள்ளனர். நடப்பாண்டில் மட்டும் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் வருமானத்தை உயர்த்தி இருப்பதும் ஈராண்டு ஆட்சியின் சாதனை தான்! அதிக மதுபாட்டில் விற்கும் டாஸ்மாக் அதிகாரிக்கு பாராட்டும், குறைவாக பாட்டில் விற்கும் அதிகாரிக்கு சார்ஜ் மெமோவும் கொடுக்கிறார்கள். சாராய அமைச்சரைப் பொறுத்தவரை மாமூல் மட்டும் போனால் போதும். வேறு எதைப் பற்றியும் அவருக்குக் கவலை இல்லை. ஒருகடைக்கு மாதம் 40 ஆயிரம் வரை மாமுல் போகிறது.

ஜெயலலிதா காலத்தில் கொண்டுவந்த தாலிக்குத் தங்கம், ஸ்கூட்டி என மக்கள் நலத்திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டு, வருவாயை உயர்த்தியதாக வாய்சவடால் விடும் அரசாகவே திமுக அரசு உள்ளது. மொத்தத்தில் இது துக்ளக் தர்பார். கள்ளச் சாராய தர்பார்!

டிடிவி தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பு

மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக தயாராகிவிட்டதா?

நாங்கள் எப்போதுமே தயார் நிலையில் தான் இருக்கிறோம். திமுகவுகு எதிராக எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் எனச் சொன்னார்களே... செய்தார்களா? டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவோம் எனச் சொல்லிவிட்டு தானியங்கி இயந்திரத்தில் மதுவை வினியோகிக்கிறார்கள்.

பொன்முடி போன்ற அமைச்சர்கள் மக்கள் நலத்திட்டங்களை முன்வைத்து மக்களை போட்டிபோட்டுக் கொண்டு கேலியாகப் பேசுகின்றனர். இந்தக் கோமாளித்தனங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும் மக்கள் அதிமுகவின் போர்ப்படைத் தளபதிகளாகிவிட்டார்கள்.

ஓபிஎஸ்ஸும் டிடிவியும் கைகோத்திருப்பது அதிமுகவின் முக்குலத்தோர் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்கிறார்களே..?

தமிழகத்தில் எப்போதுமே சாதி அரசியல் எடுபடாது. தமிழர்கள் இயல்பாகவே பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். தேர்தல் என வரும்போது கட்சியைத் தான் பார்ப்பார்கள். சாதியைப் பார்க்க மாட்டார்கள். அப்படிப் பார்த்தால் பத்து சாதி சங்கத் தலைவர்கள் சேர்ந்தால் முதல்வர் ஆகிவிடலாமே? அப்படியான வரலாறு தமிழ் மண்ணிலே கிடையாது. அதிமுகவில் அனைத்து சாதி, மதத்தை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். ஓபிஎஸ், டிடிவி மட்டுமல்ல, அவர்களோடு சசிகலாவும் சேர்ந்தாலும் அதிமுகவை பாதிக்காது.

மக்களவைத் தேர்தலில் பாஜக கோட்டாவில் சீட்வாங்கி, அதிமுக கூட்டணியிலேயே போட்டி போடலாம் என ஓபிஎஸ், டிடிவி இருவரும் திட்டமிடுவதாகச் சொல்கிறார்களே..?

அது வெறுமனே ஊடகங்களில் கசியும் ஊகம் தான். அது நடக்கவே நடக்காது. நேர்வழியிலோ, குறுக்கு வழியோ எந்த வழியிலும் அவர்கள் அதிமுகவுக்குள் வரமுடியாது. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE