வங்கதேச பிரதமர் மாளிகை ‘சூறை’ முதல் பங்குச்சந்தை வீழ்ச்சி பின்புலம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா - அடுத்து என்ன? வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, பாதுகாப்பு கருதி வெளிநாடுச் சென்றுவிட்டார். இங்கிலாந்திடம் அவர் தஞ்சம் கோரியுள்ளதாக தெரிகிறது.

வங்கதேசத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு அந்நாட்டு ராணுவ விமானத்தில் தனது சகோதரி ஹேக் ரேஹானாவுடன் பிரதமர் மாளிகையான கனபாபனில் இருந்து புறப்பட்டார். அவர்கள் புறப்பட்ட விமானம் புதுடெல்லி அருகே ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அவர்கள் இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும், இங்கிலாந்து அரசிடம் ஷேக் ஹசீனா தஞ்சம் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஷேக் ரேஹானா இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் எனவே, அவரோடு ஷேக் ஹசீனா லண்டனில் தங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹிண்டன் விமானப்படை தளத்தில் ஷேக் ஹசீனாவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார். இந்திய விமான படையினர் மற்றும் ராணுவத்தினர் அவருக்கு தகுந்த பாதுகாப்பை அளித்து வருகின்றனர். தற்போது அவர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் நிலை குறித்து அஜித் தோவலிடம் ஷேக் ஹசீனா விவரித்துள்ளார். மேலும், தனது அடுத்தகட்ட திட்டம் குறித்தும் விவாதித்துள்ளார்.

இதனிடையே, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ராணுவத் தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், “இடைக்கால அரசை ராணுவம் அமைக்கும். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார். வங்கதேச தேசிய கட்சி, ஜதியா கட்சி, ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் ராணுவத் தளபதி ஆலோசனை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

முன்னதாக, கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், போலீஸை ஏவி போராட்டக்காரர்களைக் கொன்றதற்கு நீதி கேட்டு ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வங்கதேச தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத் தொடங்கினர். மேலும், பல்வேறு நகரங்களிலும் வங்கதேச போராட்டம் வெடித்தது. தலைநகர் டாக்கா நோக்கிய பேரணியை மாணவர்கள் தீவிரப்படுத்தினர்.

இதனால், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல்வேறு நகரங்களில் இருந்தும் டாக்கா வந்தடைந்த மாணவர்கள், பிரதமர் ஷேக் ஹசீனாவின் மாளிகைக்குள் நுழைந்தனர். இதனால் அங்கு நிலைமை பதற்றம் நிறைந்ததாக மாறி இருக்கிறது. இந்தப் போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடந்துவிட்டது. ஜூலையில் இருந்து இதுவரையிலான போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ கடந்ததும் குறிப்பிடத்தக்கது.

வங்கதேச பிரதமர் மாளிகை சூறையாடல்: அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், போராட்டக்காரர்கள் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் நுழைந்து சூறையாடினர்.

கைகளில் தடிகளுடன் அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி பிரதமர் இல்லத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஆட்டுக்குட்டி, முயல், வாத்து என்று கிடைத்த பொருட்களை எடுத்துச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. சிலர், பிரதமரின் நாற்காலியில் அமர்ந்துகொண்டு புகைப்படம் எடுத்தனர். இன்னும் சிலர் அங்கிருந்த உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிட்டனர். சிலர் பாத்திரங்கள், மேசை விரிப்புகளை எடுத்துச் சென்றனர். இன்னும் சிலர் அங்கிருக்கும் புல்வெளி, அழகான இடங்கள் முன் புகைப்படம் எடுத்தனர். போராட்டக்காரர்களின் செயல்கள் புகைப்படங்கள், வீடியோக்களாக வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுவருகின்றன.

வங்கதேச எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்திய இந்தியா: வங்கதேச கிளர்ச்சியின் எதிரொலியாக, இந்தியாவை ஒட்டிய 4,096 கிலோ மீட்டர் தூரம் உள்ள எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வயநாடு நிலவரம் என்ன? -வயநாடு நிலச்சரிவில் மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் தெரிந்தவை 31 மற்றும் அடையாளம் தெரியாத 158 உடல்களை அடக்கம் செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. அதேவேளையில், ஏறத்தாழ 180 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

வங்கதேச பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு எச்சரிக்கை: வங்கதேசத்தில் நிலவும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் வங்கதேசத்துக்குச் செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வங்கதேசத்தில் இப்போது இருக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெளியில் செல்வதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். டாக்காவில் உள்ள இந்திய துணை தூதரகத்துடன் தொடர்பில் இருக்கும்படி வலியுறுத்தப்படுகிறார்கள். தேவைப்படும் நபர்கள் +8801958383679, +8801958383680 +8801937400591 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநகராட்சி விவகாரம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு: டெல்லி மாநகராட்சியின் மேயருக்கு அடுத்த நிலை அதிகாரம் கொண்ட நிபுணர்கள் 10 பேரை துணைநிலை ஆளுநர் நியமனம் செய்தார். இதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி மாநகராட்சிக்கு நிபுணர்கள் 10 பேரை நியமிக்கும் அதிகாரம் டெல்லி துணைநிலை ஆளுநருக்கு உண்டு உத்தரவிட்டுள்ளது.

“மழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்” - முதல்வர்: “சென்னையில் எங்கு தண்ணீர் தேங்குகிறது என்று ஒரு இடத்தையாவது எதிர்க்கட்சிகள் காட்ட வேண்டும். பருவமழைக்கு அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்து வருகிறோம். எப்பேர்பட்ட மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நெல்லை மேயர் தேர்தல்: திமுகவின் ராமகிருஷ்ணன் வெற்றி: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் இன்னொரு கவுன்சிலர் பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதனிடையே, கோவை மாநகராட்சியின் புதிய மேயரை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், 29-வது வார்டு திமுக கவுன்சிலரான ரங்கநாயகி, கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஹாக்கி அணி வெற்றி நடை! பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி தொடரில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. பெனால்டி ஷூட் அவுட்டில் பிரிட்டனை 4-2 என்று வீழ்த்தியது. குறிப்பாக, கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்தான் இந்தப் போட்டியின் நாயகன் என்று கூற வேண்டும். 60 நிமிட முழு நேர ஆட்டத்தில் ஸ்ரீஜேஷ் செய்த தடுப்புகள் மிக அதிகம். அவருக்கும், இந்திய ஹாக்கி அணிக்கும் பாராட்டுகள் குவிகின்றன. இந்திய அணி தங்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

பங்குச்சந்தையில் இமாலய வீழ்ச்சி ஏன்? - இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை திங்கள்கிழமை எதிர்கொண்டது. வர்த்தகத்தின்போது, மும்பைப் பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் சுமார் 2,400 புள்ளிகள் சரிந்தது. அதேபோல், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 500 புள்ளிகளுக்கு மேல் இறங்கியது. மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளின் நிலையும் இதேபோல் சரிவை சந்தித்தன.

சமீப காலத்தில் இந்திய பங்குச் சந்தை சந்தித்த மிகப் பெரிய வீழ்ச்சி இது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, அமெரிக்காவின் வேலையின்மை விகிதம். வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடந்துகொண்டிருக்கும்போது அமெரிக்கா நாட்டின் வேலைவாய்ப்பு குறித்த தரவுகள் வெளியானது. இந்த தரவுகளில், அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் 4.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது தெரியவந்தது. இது 3 ஆண்டுகளில் இல்லாத உச்சம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தரவுகள் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுமோ என்ற அச்சத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் உருவாக்கியதன் எதிரொலி, இந்திய பங்குச் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்த இஸ்ரேலை பழிவாங்க எப்போதும் வேண்டுமென்றாலும் தாக்குவோம் என ஈரான் அறிவித்திருப்பது மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. இந்த காரணங்களும் இன்றைய பங்குச் சந்தை சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இதுதவிர, இந்தியாவில் ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகள் திருப்தி அளிப்பதாக இல்லை என்பதால் இந்தியப் பங்குகளை சில முதலீட்டாளர்கள் விற்கத் தொடங்கி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதுவும் இந்திய பங்குச் சந்தையின் இன்றைய வீழ்ச்சிக்கு காரணமாக சொல்லப்படுகிறது. திங்கள்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,222 புள்ளிகளும், நிஃப்டி 662 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE