விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங்கை ஏன் இன்னும் கைது செய்யவில்லை. அவர் குறித்து புகார் தெரிவித்தவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது என சிபிசிஐடி அலுவலகத்திற்கு ஆஜராக வந்த பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து அவர்களின் பற்களைப் பிடுங்கியதாக புகார் எழுந்தது. முதன்முதலில் இந்தக் குற்றச்சாட்டைக் கிளப்பிய சூர்யா என்பவர் பிறழ்சாட்சி ஆனார். ஆனால், மற்ற புகார்தாரர்கள் தங்கள் குற்றச்சாட்டில் உறுதியாகவே இருந்தனர்.
இதனால் ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டார். இவ்விவகாரத்தில் தொடர்புடைய காவலர்கள், ஆயுதப்படை முகாமுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இந்த சம்பவத்தின் போது திருநெல்வேலி எஸ்.பியாக இருந்த சரவணனும் டிஜிபி அலுவலகத்தின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதேபோல் உளவுத்துறைப் போலீஸாரும் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாகவும் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. கல்லிடைக்குறிச்சி ஆய்வாளர் சந்திரமோகன், விக்கிரமசிங்கபுரம் ஆய்வாளர் ராஜகுமாரி, ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். மேலும் அம்பாசமுத்திரம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சக்தி, தனிப்பிரிவு காவலர்கள் இருவர் உள்பட 6 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தன் விசாரணை அறிக்கையை ஏப்ரல் 3-ம் தேதி, நெல்லை ஆட்சியரிடம் சமர்ப்பித்தார். இதேபோல் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் இதுதொடர்பான புகார்கள் அதிகளவில் சென்றுள்ளது. இதன் காரணமாக ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை செயலர் அமுதா ஐஏஎஸ், இவ்விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகம் வந்து இரண்டு கட்ட விசாரணை நடத்தி அமுதா அறிக்கை கொடுத்தார்.
பல் பிடுங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட பல்வீர் சிங் மீது ஏற்கெனவே ஐ.பி.சி 324, 326, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது சிபிசிஐடி போலீஸார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்விவகாரத்தில் நெல்லையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜராக எட்டு பேருக்கு சம்மனும் அனுப்பப்பட்டிருந்தது.
இதில் கருங்குளம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரின் தரப்பினர் ஆஜராகினர். இதில் அருண்குமாரின் தாய் ராஜேஸ்வரி, தந்தை கண்ணன், அவர்களது வழக்கறிஞர் பாண்டியராஜன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, அவர்கள் விசாரணைக்கு பதில் அளிக்காமல் மனுமட்டும்கொடுத்தனர். தொடர்ந்து அருண்குமாரின் வழக்கறிஞர் பாண்டியராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டிக் கொடுத்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ பல்வீர்சிங் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. குற்றம் சாட்டியவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாதிக்கப்பட்டவர் இப்போது பெங்களூரில் இருக்கிறார். அவர் 5-ம் தேதி ஆஜராக 3-ம் தேதி சம்மன் அனுப்புகின்றனர். ஐபிஎஸ் அதிகாரி மேல் நடக்கும் குற்றச்சாட்டு குறித்து ஐ.ஜி, அல்லது டிஐஜி நிலை அதிகாரியே விசாரிக்க வேண்டும். சாத்தான்குளம் சம்பவத்தில் காவலர்கள் கைது செய்யப்பட்ட பின்பே உண்மைநிலை வெளிவந்தது. அதேபோலத்தான் இதிலும் பல்வீர் சிங்கை கைது செய்து விசாரிக்க வேண்டும் ”என்றார்.