மத்தியப் பிரதேசம் | மத நிகழ்வில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் உயிரிழப்பு

By KU BUREAU

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். ஷாபூரில் உள்ள ஹர்தாவுல் பாபா கோயிலில் நடந்த மதநிகழ்வின் போது இந்தச் சோகம் நடந்துள்ளது. காயமடைந்த குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சோக சம்பவத்தினைத் தொடர்ந்து உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சுவர் இடிந்து விழுந்ததை அடுத்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சம்பவ இடத்துக்கு தற்போது உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் 10 முதல் 15 வயது உள்ளவர்கள் என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்து நான்கு பள்ளிச்சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்த அடுத்த நாளில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 5- 7 வயதுள்ள குழந்தைகள் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முந்தைய சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தில் சுவர் இடிந்து விழுந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோயில் சுவர் இடிந்து விழுந்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு வேதனை தெரிவித்துள்ள மாநில முதல்வர் மோகன் யாதவ் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சாகர் மாவட்டம் ஷாம்பூரில் பெய்துவரும் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 9 அப்பாவி குழந்தைகள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். காயமடைந்த குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். காயமடைந்த குழந்தைகள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். அப்பாவி குழந்தைகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களும் இரங்கலும். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE