சிறகை விரி உலகை அறி - 95; வரலாறு சொல்லும் சிறைக்கூடம்!

By சூ.ம.ஜெயசீலன்

காலந்தோறும் மாற்றத்தினூடாகவே மானுடம் செழித்திருக்கிறது. சுதந்திரம், குடியரசு, வாக்குரிமை, கல்வி, தொழில், கட்டிடங்கள், ஒளிரும் விளக்குகள், விரைந்தோடும் வாகனங்கள் அனைத்தும் வளர்ச்சியின் சாட்சிகளாக திகழ்கின்றன. அதைத் தேடியே பலரின் வாசிப்பும், பயணங்களும் திட்டமிடப்படுகின்றன. ஆனால், நகரத்தின் வரலாற்றை அங்குள்ள சிறையிலிருந்தே வாசிக்க வேண்டும் என்பதை டப்ளின் பயணம் எனக்கு கற்றுக் கொடுத்தது.

சிறை ஒன்று உதயமானது

கின்னஸ் ஸ்டோர் ஹவுசில் இருந்து புறப்பட்டேன். வெயில் குறைந்திருந்தது. குளிரில் குளித்த காற்று முகத்தில் சில்லிட்டது. காய்ந்த உதடுகளை எச்சிலால் நனைத்தபடி நடந்தேன். கில்மெய்ங்கம் சிறையின் (Kilmainham gaol), சாம்பல் நிற சுவருக்கு முன்பாக நின்றேன். மரங்கள் ஆடைகளைக் களைந்து நின்றன. சாலையைக் கடந்து எதிர்திசையில் சென்று, கட்டிடத்தை படமெடுத்தேன். மறுபடியும் சாலையைக் கடந்து, கைதிகள் உயிர் பயத்துடன் சென்று வந்த வாயில் வழியாக சிறைச்சாலைக்குள் நுழைந்தேன்.

கில்மெய்ங்கம் சிறை 1796-இல் கட்டப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, வடக்கு மற்றும் வடகிழக்கு அயர்லாந்து நாடுகளின் கைதிகளை ஒன்று சேர்க்கும் பனிமனையாக பிரிட்டிஷ் அரசாங்கம் இதை பயன்படுத்தியது. பிரிட்டனின் ஆளுகையில் இருந்த ஆஸ்திரேலியாவுக்கு, 4 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் இங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளார்கள்.

அருங்காட்சியகம் உருவானது

1924-இல் சிறை மூடப்பட்டது. வெறுமனே நின்ற சிறைக் கட்டிடத்தை மக்கள் வெறுத்தார்கள். சிறைக்கூட சாலையில் செல்லும்போது மனம் வேதனையில் துடிக்கிறது என்று முறையிட்டார்கள். கட்டிடத்தை இடிக்க கோரிக்கை வைத்தார்கள். ஆனால், தமது வரலாற்றின் கருப்பு பக்கங்களை எதிர்கால தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என விரும்பியவர்களால், ‘சிறைச்சாலை அருங்காட்சியகம்’ உருவானது.

சிறை வளாகம்

குற்றங்களின் தன்மையும் காரணங்களும்

‘19-ஆம் நூற்றாண்டில் டப்ளினில் நடந்த குற்றங்கள்’ என்னும் தலைப்பை வாசித்தேன். 1799 முதல் 1910 வரையில் உள்ள சிறைச்சாலை ஆவணங்களையும் மற்ற ஆதாரங்களையும் குறிப்பாக, இன்ஸ்பெக்டர் ஜெனரலின் அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார்கள். அதன்மூலம், அக்காலகட்டத்தில் நடந்த குற்றங்கள், குற்றத்துக்கான காரணங்கள் மற்றும் 19-ஆம் நூற்றாண்டு டப்ளின் நகரத்தின் சமூக சூழல் குறித்த தனித்த சித்திரம் விரிகிறது.

நகர விரிவாக்கம், அதனால் ஏற்பட்ட வாழ்வாதார சிக்கல், வறுமை ஆகியன பெருங்குற்றங்கள் நடைபெற முக்கிய காரணங்களாக இருந்துள்ளன. சிறிய அளவிலான குற்றங்களுக்கு அல்லது, தற்காலிகமாக கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கிரீமியன் போர் மற்றும் நெபோலோனிக் (Napoleonic) போர்க்கால கலவரங்களும், குடிகாரர்கள், மற்றும் டோனிபுரூக் சந்தை (Donnybrook fair) எனப்படும் வருடாந்திர குதிரை வியாபாரத்தின்போது நடந்த அடிதடிகளும், வாக்குவாதங்களும் காரணங்களாக இருந்துள்ளன. அருகிலிருந்த, டோனிபுரூக் சந்தையின் படத்தைப் பார்த்தேன்.

குதிரை சந்தை

குற்றங்களின் வகைகள்

நகரத்தின் வளர்ச்சிக்கேற்ப குற்றங்களின் வகைகள் மாறியதை அறிந்தேன். உதாரணமாக, 1834-இல், டப்ளினுக்கும், கடற்கரை நகரமான டான் லாகயருக்கும் (Dun Laoghaire) தொடர்வண்டி பாதை அமைந்த பிறகு, கட்டணம் செலுத்த மறுத்தல், பெட்டி மற்றும் எச்சரிக்கை விளக்குகளை சேதப்படுத்துதல், பாலியல் தொழில் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளன. சுவரில் தொங்கிய ஓவியத்தில், தொடர்வண்டியைப் பார்த்தேன். தற்போதுபோல தண்டவாளம் இல்லை. தண்டவாள அமைப்பில், நிலத்தை கீறி எடுத்திருக்கிறார்கள். அதனுள் சக்கரங்கள் உருண்டு, தொடர்வண்டியை இழுக்கின்றன.

டப்ளின் - கிங்ஸ்டவுன் இருப்புப்பாதை

‘பேரரசி விக்டோரியா காலத்து சிறை’ எனும் தலைப்பை வாசித்தேன். குற்றவாளிகளைத் திருத்துவதற்கு சிறைகளே சிறந்த இடம் என்பது விக்டோரியாவின் எண்ணம். அவர் காலத்தில், அதற்கு முன்பும் பின்பும் இல்லாத அளவுக்கு சிறைச்சாலைகள் அதிகம் கட்டப்பட்டன. 1970கள் வரை, கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் இருந்த 40 விழுக்காட்டு சிறைச்சாலைகள் விக்டோரியா காலத்தில் (1837-1901) கட்டப்பட்டவையே!

அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட வளாகம்

பெண் கைதிகள் அதிகம்

1881-இல் கில்மெய்ங்கம் முழுவதுமாக ஆண்களுக்கான சிறையாக மாறியது. அதுவரை, பெண் கைதிகளும் இங்கேதான் அடைக்கப்பட்டிருந்தார்கள். குறிப்பாக, 1850களில் ஆண் கைதிகளுடன் ஒப்பிடும்போது, பெண் கைதிகளே அதிகம் இருந்துள்ளனர். அதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் பெண் கைதிகளின் விகிதாச்சாரம் 25 விழுக்காடு மட்டுமே.

1845 -1849 காலகட்டத்தில், உருளைக்கிழங்கு விளைச்சல் வீழ்ச்சியால் திடீர் பஞ்சம் ஏற்பட்டது. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பட்டினியாலும், அது தொடர்பான நோய்களாலும் உயிரிழந்தார்கள். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் புலம் பெயர்ந்தார்கள். திருமண வயதுள்ள ஆண்கள் பெருமளவில் இடம் பெயர்ந்ததாலும் திருமண வாய்ப்பு குறைந்ததாலும், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததினாலும், பெண்கள் பலர் பாலியல் தொழில் குற்றவாளிகளானார்கள். மதுவுக்கு சில பெண்கள் அடிமையானார்கள். இதனால் பெண் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. சமூகத்துக்கு ஒவ்வாதவர்கள் என அவர்கள் மீது முத்திரை குத்தப்பட்டதால், அவர்களால் மறுபடியும் நல்வாழ்வு நோக்கி திரும்பவே இயலவில்லை. பெண்களும், குழந்தைகளும் வரிசையாக சிறைக்குள் செல்லும் படத்தைப் பார்த்தேன்.

உணவு அளந்த தராசு

தராசில் அளந்து வழங்கப்பட்ட உணவு

பஞ்சத்தால் குற்றங்களும், பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அயர்லாந்து முழுவதும் ஏறக்குறைய 163 ஆதரவற்றோர் இல்லங்கள் (Workhouses) திறக்கப்பட்டன. 1840 முதல் 1920கள் வரை 80 ஆண்டுகள் இவை நடைமுறையில் இருந்தன. இந்த இல்லங்களில், உயிரைத் தக்க வைக்கும் அளவு உணவு வழங்கப்பட்டது. சிறையும் நிறைந்து வழிந்தது. கைதிகளுக்கு உணவை தராசில் அளந்து கொடுத்தார்கள்.

‘4 அவுன்ஸ் வித்தியாசம்’ என்கிற தலைப்பில், இன்ஸ்பெக்டர் ஜெனரல் எழுதிய புகார் கடிதம் குறித்து வாசித்தேன். “ஆதரவற்றோர் இல்லங்களைவிட, 15 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறையில், 4 அவுன்ஸ் உணவு கூடுதலாக வழங்கப்பட்டது. இதனால், ஆதரவற்றோர் இல்லத்தில், வேண்டுமென்றே தவறிழைத்து சிறார் சிறைக்கு வரும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே, சிறார் சிறையில் 4 அவுன்ஸ் உணவு 1855-இல் குறைக்கப்பட்டது” என பரவச மனநிலையில் எழுதியுள்ளார்.

சாப்பாட்டு கரண்டிகள்

குற்றமும் தண்டனையும்

குற்றங்களும் தண்டனைகளும் குறித்த தகவல்களை கணினி திரையில் பார்த்தேன். மார்க்கிரேட் எனும் 43 வயது பெண், இறந்த 2 வாத்துகளை வைத்திருந்ததால் 7 நாட்கள் சிறை தண்டனை பெற்றுள்ளார். வில்லியம் ஸ்மித் என்னும் 26 வயது தோட்டக்காரர், காய்கறி திருடியதற்காகவும், 40 வயது கூலி தொழிலாளி பேட்ரிக், இறைச்சி திருடியதற்காகவும் ஒரு மாத சிறை தண்டனை அனுபவித்துள்ளனர்.

ஒவ்வோர் அறையாகச் சென்று பார்த்தபோது, உணவு அளக்கப் பயன்படுத்திய தராசு, கைதிகளின் பொருட்கள், ஓவியங்கள், குறிப்பேடுகள் உள்ளிட்டவைகளைப் பார்த்தேன். கைதிகள் உணவு சாப்பிட பயன்படுத்திய 2 கரண்டிகள் இருந்தன. கரண்டியை ஆயுதமாகப் பயன்படுத்தி தப்பிக்கவோ தாக்கவோ கூடாது என்தற்காக, அதனை கொம்புகளால் செய்துள்ளார்கள். அயர்லாந்து சிற்பி, ஆலிவர் 1901-ஆம் ஆண்டு செதுக்கிய INIS FAIL எனும் வெண்கலச் சிலையை பார்த்தேன். நாட்டின் துயரத்தை பெண்ணின் சிற்பம் சுமந்து நிற்கிறது.

INIS FAIL வெண்கலச் சிலை

உயிர்த்தெழும் போராட்டம்

சிறையின் அறைகளைக் காட்ட வந்த வழிகாட்டியுடன் ஒவ்வொரு தளமாக ஏறி இறங்கியபோது, ஒரு சுவரை சுட்டிக் காட்டினார். “800 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற அயர்லாந்தில் எண்ணற்ற போராட்டங்கள் நடந்தன. அதில் முக்கியமானது, 1916, ஏப்ரல் 26 இயேசு உயிர்த்த ஞாயிறுக்கு அடுத்த திங்களன்று தொடங்கியது. உயிர்த்தெழும் (Rising) போராட்டம் என அழைக்கப்படுகிறது. மிகத் தீவிரமாக நடந்த போராட்டத்தில், 1916, ஏப்ரல் 29 அன்று தலைவர்கள் சரணடைந்தார்கள். மரண தண்டனை விதிக்கப்பட்டது. மே 3 முதல் 12 வரையில், 14 பேர் இந்த இடத்தில்தான் கொல்லப்பட்டார்கள். பெரும் போராட்டத்தின் முடிவில், 1921 டிசம்பர் 6-ஆம் நாள் அயர்லாந்துக்கு விடுதலை கிடைத்தது. ஆயினும், 1922 ஜுன் மாதம் உள்நாட்டு கலவரம் வெடித்தது. குடியரசு கட்சித் தலைவர்கள் இங்கே அடைக்கப்பட்டார்கள். அதில், 77 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1922 நவம்பர் 17-ஆம் தேதி 4 பேர் இங்கே கொல்லப்பட்டார்கள்” என்றார். பேரமைதி சூழ்ந்திருந்தது.

அரசியல் கைதிகள் அடைக்கப்பட்ட சிறை வளாகம்

கனவிலும் தப்பிக்க முடியாது

சிறையின் மற்றொரு பகுதிக்குச் சென்றோம். கடுங்காவல் தண்டனை பெற்றவர்களும், அரசியல் கைதிகளும் அடைக்கப்பட்டிருந்த சிறை வளாகம் அது. ∩ வடிவத்தில் இருக்கிறது. இரண்டு தளங்கள் உள்ளன. ∩-ன் மையத்திலிருந்து உயரே மேல்நோக்கி படி போகிறது. குறிப்பிட்ட தூரம் சென்றதும் முதல் தளத்துக்குச் செல்ல வலது பக்கமும், இடது பக்கமும் பாதைகள் பிரிகின்றன. தொடர்ந்து மேலே சென்றால் குறிப்பிட்ட தூரத்தில் இரண்டாவது தளத்துக்குச் செல்ல, வலது பக்கமும் இடது பக்கமும் பாதைகள் பிரிகின்றன. இருபக்கமும் கதவுகள் உள்ளன. ∩-ன் வலது - இடது பக்க கட்டிடங்களின் அறைகளுக்கு முன்பாக தாழ்வாரம் உள்ளது. அதிலிலும் இரும்பு வேலி உண்டு.

கைதிகளுக்கு உணவு கொடுக்க, சிறையின் ஒவ்வோர் அறை கதவிலும் சிறு திறப்பு இருக்கிறது. அதைத் திறந்து உள்ளே கொடுத்துள்ளார்கள். கைதிகளை மேற்பார்வையிட கதவில் சிறு ஓட்டை உள்ளது. அறையின் பின் பக்கம், ஒரு ஜன்னல் இருக்கிறது. அவ்வளவுதான். மாயாஜாலம் செய்துகூட தப்பிக்க முடியாது. தனிமையைப் போக்க ஒரு கைதி சுவரில் அழகான ஓவியம் வரைந்திருந்ததை ஓட்டை வழியாகப் பார்த்தேன். “எல்லாம் இழந்த பிறகும், படைப்பாற்றல் வழியாக வாழ்வில் அர்த்தம் காண முடியும்” என்று சொன்ன, விக்டர் பிராங்கிளை நினைத்துக்கொண்டேன்.

(பாதை விரியும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE