புதுடெல்லி: சர்வதேச வேளாண் பொருளாதார நிபுணர்களின் மாநாடு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன் 32-வது மாநாடு 65 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவில் நடைபெறுகிறது. டெல்லியில் வரும் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 70 நாடுகளைச் சேர்ந்த 1,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, நாட்டின் வேளாண்மைக்கும், உணவு பாதுகாப்புக்கும் சவாலான காலத்தை சந்தித்தது. அப்போது இந்தியாவின் உணவு பாதுகாப்பு குறித்து உலக நாடுகள் கவலைப்பட்டன. ஆனால், இப்போது இந்திய உணவு மிகை நாடு. பால், பருப்புகள் மற்றும் மசாலா பொருட்கள் உற்பத்தியில் உலகளவில் இந்தியாமுதல் இடத்தில் உள்ளது. உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருத்தி, சர்க்கரை, மற்றும் தேயிலை உற்பத்தியில் உலகளவில் 2-ம் இடத்தில் உள்ளது. உலக உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு தீர்வு அளிப்பதை நோக்கி இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
உணவு முறையில் மாற்றம் குறித்த விவாதத்துக்கு இந்தியாவின் அனுபவம் மதிப்புமிக்கது. இது உலகத்துக்கு பயனளிக்கும். உலக நலனுக்கு செயல்படுவதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. அதனால்தான் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம், வாழ்க்கை திட்டம், ‘ஒரே பூமி, ஒரே சுகாதாரம்’ போன்ற மந்திரங்களை பல்வேறு அரங்குகளில் இந்தியா முன்வைக்கிறது.
இந்தியாவின் பொருளாதார கொள்கைகளில் வேளாண்மை முக்கிய இடத்தில் உள்ளது. இந்திய வேளாண்மையில் 90 சதவீத விவசாயிகள் சிறியளவிலான நிலம் வைத்துள்ளனர். இந்த சிறுவிவசாயிகள்தான் இந்திய உணவு பாதுகாப்பின் மிகப் பெரிய பலமாக உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், பருவநிலைகளை தாக்குப்பிடித்து வளரும் 1,900 புதிய வகை பயிர்களை இந்தியா வழங்கியுள்ளது. மேலும் ரசாயனம் இல்லாத இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறது.
» வயநாட்டில் 100 வீடுகளை கர்நாடக அரசு கட்டித்தரும்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
» வாலாஜா அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: மருத்துவர்கள் அலட்சியம் என புகார்
பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு என்ற இலக்கை நோக்கிஇந்தியா சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் சிறு தானியங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது. பிரதமரின் கிசான் சம்மான்நிதி திட்டத்தில் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக நிதியுதவி செல்கிறது. விவசாயத்துறையில் இந்தியா மேற்கொள்ளும் டிஜிட்டல் நடவடிக்கைகள், விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தும். விவசாயத்துறையில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இந்தியவிவசாயிகளுக்கு மட்டும் பயனடையவில்லை, இது உலக உணவு பாதுகாப்பையும் பலப்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.