வயநாடு நிலச்சரிவு: மறுசீரமைப்பு பணிகளுக்கு நடிகர் மோகன்லால் ரூ.3 கோடி அறிவிப்பு!

By KU BUREAU

வயநாடு: பிரபல மலையாள நடிகரும், இந்திய பிராந்திய ராணுவத்தில் லெப்டினட் கர்னலாக இருக்கும் மோகன்லால் சனிக்கிழமை நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டிருக்கும் வயநாடு பகுதிகளை நேரில் பார்வையிட்டார். மேலும் மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ.3 கோடி வழங்கப்படும் என்றார். அப்போது அவர் தனது ராணுவ சீருடையில் இருந்தார்.

முதலில் மேம்பாடியில் உள்ள ராணுவ முகாமுக்குச் சென்ற மோகன்லால் அங்கு அதிகாரிகளிடம் விவாதம் நடத்தினார். பின்பு மற்றவர்களுடன் இணைந்து நிலச்சரிவு பாதித்தப் பகுதிகளுக்குச் சென்றார்.

அவர், சூரல்மலை, முண்டக்கை மற்றும் புஞ்சிரிமட்டோம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அங்கு, ராணுவம் மற்றும் உள்ளூர்வாசிகள் உள்ளிட்ட மீட்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளவர்களுடன் உரையாடி நிலச்சரிவு சம்பவத்தின் தீவிரத்தினை அறிந்து கொண்டார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், "நிலச்சரிவின் பாதிப்பை நேரில் பார்த்தால் மட்டுமே உணர முடியும். ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்பு குழு, மற்ற பிற அமைப்புகள், உள்ளூர்வாசிகள் என இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் சிறப்பான பணிகளைச் செய்து வருகின்றனர்.

நான் அங்கம் வகிக்கும் இந்திய ராணுவத்தின் 122 காலாட்படை பட்டாலியன் (டிஏ) தான் பேரழிவு பாதித்த பகுதிக்கு முதலில் வந்த குழுவாகும். நான் அங்கம் வகிக்கும் விஸ்வசாந்தி அமைப்பு, இங்கு நடைபெறும் மறுவாழ்வு பணிக்காக ரூ.3 கோடி வழங்க தீர்மானித்துள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நிதி வழங்கப்படும்" என்றார்.

நடிகர் மோகன் லால் கடந்த 2009-ம் ஆண்டு இந்தியாவின் பிராந்திய ராணுவத்தில் லெப்டினட் கர்னலாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மோகன்லாலுடன் வந்திருந்த திரைப்பட இயக்குநர் மேஜர் ரவி, "முண்டக்கை பகுதியில் இடிந்திருக்கும் பள்ளி மீண்டும் கட்டித்தரப்படும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE