தொழிலாளர்களுக்கு துரோகம் செய்கிறதா திமுக அரசு?

By என்.சுவாமிநாதன்

திமுக கூட்டணியில் இருந்தாலும் ஆளும் கட்சியின் தவறுகளையும் இடதுசாரிகள் அவ்வப்போது சுட்டிக் காட்டியே வருகின்றனர். அந்தவகையில் சட்டமன்றத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிமுகம் செய்த ‘தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 65 ஏ’ - யைக் கைவிட வேண்டும் என போர்க்கொடி தூக்கி இருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி!

தொழிலாளர்கள்

தமிழக சட்டமன்றகூட்டத் தொடரில் இம்முறை பல நல்ல திட்டங்களும், தீர்மானங்களும் முன்மொழியப்பட்டு வருகின்றன. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பரில் அமல்படுத்தப்படும் என்பதில் தொடங்கி, ஆளுநரிடம் செல்லும் கோப்புகளுக்கு அவர் கையெழுத்திட்டு வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற தனித் தீர்மானம் வரை பலரது கவனத்தையும் ஈர்த்தது.

ஆனால், கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்களை உச்சிமுகர்ந்து வரவேற்ற இடதுசாரிகள், ‘தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 65 ஏ-யைத் திரும்பப்பெற வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசால் முன்மொழியப்பட்டு பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமே இப்போது அமலில் இருக்கும் ‘தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 65 ஏ’ தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையே காவுவாங்கிவிடும் என்பது இடதுசாரிகளின் வாதம். இந்தியாவில் பாஜக ஆளாத மாநிலங்களில் தமிழகத்தில் மட்டுமே இந்தச் சட்டம் அமலுக்கு வர இருப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்பதும் தொழிற்சங்கவாதிகளின் குரலாக ஒலிக்கின்றது.

இத்தனைக்கும் தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தொழிற்சங்கமான தொமுச-வுமே போராடித்தான் வந்தது. அப்படி இருக்கையில் இப்போது இந்தச் சட்டத்தை அமல்படுத்தியே ஆகவேண்டிய அழுத்தம் எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்புகிறார்கள்.

கே.பாலகிருஷ்ணன்

தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், “தொழிலகங்கள் மற்றும் தொழில்துறை சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார். ஆனால், இந்த விஷயத்தில் சிறிதளவும் தொழிலாளர் நலன் குறித்துக் கவலைப்படவில்லை என்கிறார்கள் தொழிற்சங்கவாதிகள்.

இந்த நிலையில், தொழில்துறையினரின் கோரிக்கைகளை ஏற்று தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவது பல சிக்கல்களை ஏற்படுத்தும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

அவரிடம் இந்தச் சட்டம் குறித்து கேட்டபோது, “தொழிலாளர்களின் உரிமை, போராட்ட குணம் என அனைத்தையும் இச்சட்டம் இல்லாமல் செய்துவிடும் அபாயம் இருக்கின்றது. தொழிலாளர்களை போராட்டத்திற்கு எதிராக ஒடுக்குவதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். தொழிற்சாலைகள் சட்டத்தில் ஏற்கெனவே சில சாராம்சங்கள் உள்ளன. அதன்படி, தேவை நிமித்தமான தருணங்கள், அவசர நேரங்களில் தொழிற்சாலை ஆய்வாளரின் அனுமதியைப் பெற்று சில விதி விலக்குகள் பெற்றுக்கொள்ள சட்டம் இடம் வழங்கி உள்ளது. அதுவே முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட போதுமான சுதந்திரமாக இருக்கும். இந்நிலையில் இந்தத் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால் தொழிலாளர்கள் விருப்பம் போல் சுரண்டப்படுவார்கள். அதற்கான அளவுகடந்த அதிகாரத்தை இந்தச் சட்ட திருத்தம் முதலாளிகளுக்கு வழங்கிவிடும்.

இதையெல்லாம் விட அபாயகரமான விஷயம் என்னவென்றால், இந்தச் சட்டத் திருத்தம் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைமுறையையும் இல்லாமல் செய்துவிடும். இன்னொன்று, மத்திய பாஜக அரசு இந்தச் சட்டத்தை கொண்டுவந்த தருணத்தையும் இங்கே நாம் நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து எதிர்கட்சியின் எம்பி-க்கள் அனைவரும் மக்களோடும், விவசாயிகளோடும் போராட்டத்தில் இருந்தபோது விவாதம், வாக்கெடுப்பு என எதுவுமே இல்லாமல் பாஜக கொண்டு வந்த சட்டம் இது.

இந்த மையத் தொகுப்புச் சட்டம், இந்திய அரசால் நிறைவேற்றப்பட்டாலும் தமிழ்நாட்டில் இதுவரை அறிமுகம் ஆகாமல் இருந்தது. அதை இப்போது அனுமதிப்பது முதலாளிகள் தங்கு தடையின்றி உழைப்பாளிகளைச் சுரண்டவே வழிவகுக்கும். முதல்வர் எங்கள் கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. விரைவில் அவரை நேரில் சந்தித்தும் இதுகுறித்து வலியுறுத்துவோம்” என்றார்.

தமிழக கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள்

இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னையில் தான் இடதுசாரி தோழர் சிங்காரவேலுவால் மே தினம் கொண்டாடப்பட்டது. தொகுப்பு வீடு திட்டத்திற்கு அவரது பெயரைத்தான் சூட்டி இருக்கிறது தமிழக அரசு. தமிழகத்தில் தொழிலாளர் தினமான மே 1-ம் தேதிக்கு பொதுவிடுமுறை அறிவித்து சிறப்புச் செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தொடர்ந்து தொழிலாளர்களின் தோழனாகவே கடந்து வரும் திமுகவின் அரசு, இந்த விஷயத்திலும் தொழிலாளர் நலன் பாதிக்காத வகையில் நல்ல தீர்வைச் சொல்லும் என பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் தொழிலாளர் தோழர்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE