ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் 19 லட்சம் கையாடல்: பெண் கணக்காளர் தலைமறைவு

By காமதேனு

சங்கரன்கோவிலில் அரசுப் பணம் 19 லட்சத்தைக் கையாடல் செய்த கணக்காளரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அலுவலக கணக்காளராக ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் வேலைசெய்து வந்தார்.

இந்த அலுவலகத்திற்கு சங்கரன்கோவிலில் உள்ள நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இருநிரந்தர கணக்குகளும், தமிழ்நாடு கிராம வங்கியில் ஒரு கணக்கும் உள்ளது.

இந்த அலுவலகத்தில் அண்மையில் தணிக்கை நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு கிராம வங்கியில் இருந்த 18 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராதது தெரியவந்தது. உடனே இதுகுறித்து விளக்கம் அளிக்க கணக்காளர் மகேஸ்வரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதன்பின்பு அவர் பணிக்கு வரவே இல்லை. இதுகுறித்து சங்கரன்கோவில் காவல்நிலையத்தில் அலுவலக மேலாளர் ராதா புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் போலீஸார் மாயமான கணக்காளர் மகேஸ்வரியைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE