வயநாட்டில் ராகுல் அளித்த உறுதி முதல் இஸ்ரேல் Vs ஈரான் பதற்றம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

ராமேசுவரம் மீனவர்கள் போராட்டம் அறிவிப்பு: இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த மீனவரின் உடலை தமிழகத்துக்கு கொண்டுவர வேண்டும், நடுக்கடலில் மாயமான மீனவர் ராமச்சந்திரனை தேடிக் கண்டுப்பிடித்துத் தரவேண்டும், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட முத்து முனியாண்டி, மூக்கையாக ஆகிய இருவரையும் எவ்விதமான வழக்கும் பதிவு செய்யாமல் தமிழகம் அழைத்து வர வேண்டும், மூழ்கிய படகின் உரிமையாளர் கார்த்திகேயனுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக முதல்வர் புதிய அறிவிப்பு: “அரசுப் பள்ளிகளில் பயின்று வெளிநாடுகளில் கல்வி பயிலும் வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கான முழு கல்விச் செலவு மற்றும் முதல் பயணச் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். அதேபோல், இந்தியாவில் முதன்மை கல்வி நிறுவனங்களில் சேர்க்கையைப் பெற்ற மாணவர்களுக்கான கல்விச் செலவையும் அரசு ஏற்கும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வயநாட்டில் 4 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட குடும்பம்: வயநாட்டில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சூரல்மலா பகுதியில் மீட்புப்பணிகளின்போது நான்கு நாட்களுக்குப் பிறகு ஒரு குடும்பத்தினர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சூரல்மலாவின் படவெட்டிகுன்னுவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயங்களுடன் அவர்களது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

குடும்பத்தில், தலா இரண்டு ஆண்களும் பெண்களும் இருப்பதாகவும், அதில் ஒரு பெண்ணின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் உயிருடன் இருக்கும் இந்தச் செய்தி அப்பகுதி மக்களுக்கும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளது.

இதனிடையே, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 330-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், உயிர் பிழைத்தோர் எங்கேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதை ட்ரோன்களில் ரேடார் கருவியைப் பொருத்தி அதன் மூலம் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.

வயநாட்டில் 100+ வீடுகள் கட்டித்தர காங். உறுதி - ராகுல் காந்தி: தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் வியாழக்கிழமை வயநாடு வந்த ராகுல் காந்தி, நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சூரல்மாலா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமை வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நேற்று முதல் நான் இங்கே இருக்கிறேன். நான் நேற்று சொன்னது போல், இது ஒரு பயங்கரமான சோகம். நேற்று நாங்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றோம். முகாம்களுக்கு சென்றோம். அங்குள்ள நிலைமையை மதிப்பீடு செய்தோம்.

இன்று பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தினோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த எல்லா வகை உதவிகளையும் அளிக்க நாங்கள் இருக்கிறோம் என்று கூறியுள்ளோம். இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் குடும்பம் உறுதியளிக்கிறது.

கேரளாவில் இதுபோன்ற ஒரு சோகம் வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை என்று நினைக்கிறேன். இது ஒரு வித்தியாசமான சோகம். வித்தியாசமான முறையிலேயே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசிடமும், கேரள முதல்வரிடமும் வலியுறுத்த உள்ளேன்" என்றார்.

இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு: வினாத்தாள் கசிவு பரவலாகவும் திட்டமிட்ட ரீதியிலும் இல்லாததால் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வினாத்தாள் கசிவை அடுத்து இளநிலை நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் வெள்ளிக்கிழமை தீர்ப்பை வழங்கினர். அதில், "நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு பரவலாகவும் திட்டமிட்ட ரீதியிலும் நடைபெறவில்லை. இதனால், தேர்வின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாகக் கூற முடியாது. எனவே, இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது" என்று தெரிவித்துள்ளனர்.

ரேஷனில் இலவச அரிசி: புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு: புதுச்சேரியில் ரேஷனில் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் தரப்படும் என்று அம்மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

கொள்ளிடம் மேம்பால கட்டுமான சேதம்: அரசு விளக்கம்: திருச்சி - கொள்ளிடம் மேம்பால கட்டுமானத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், திருச்சி கொள்ளிடம் பாலத்தின் கீழ் உள்ள மண்தாங்கு சுவரின் தற்போதைய நிலை குறித்து முழுமையாக அறிய இயலவில்லை என்று தமிழக நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் Vs ஈரான் பதற்றம்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி அறிவித்தார். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில். "இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, ​​இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் நேரடி தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க ராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்து விவாதித்தார்.

ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹொதிகள் உட்பட ஈரானின் அனைத்து அச்சுறுத்தல்களில் இருந்தும் இஸ்ரேலை பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை அதிபர் பைடன் மீண்டும் உறுதிப்படுத்தினார். இஸ்ரேலின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளோடு, பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்களைத் தணிப்பதற்கான தொடர் முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் அமெரிக்க அதிபர் வலியுறுத்தினார். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸும் இந்த அழைப்பில் இணைந்தார்" என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஈரான் எத்தகைய தாக்குதல்களை நடத்த முற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள இஸ்ரேலிய தற்காப்புப் படைகள் தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெல் அவிவ் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து: மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவுக்குச் செல்லும், அங்கிருந்து டெல்லிக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

முன்னதாக, லெபனானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "லெபனான் பிராந்தியத்தில் தற்போது அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை இந்திய குடிமக்கள், லெபனானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதோடு, லெபனானில் உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் லெபனானை விட்டு வெளியேறுமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏதேனும் ஒரு காரணத்துக்காக லெபனானில் தங்கியிருப்பவர்கள் தீவிர எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE