சென்னை: வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் சேத விவகாரங்கள் தொடர்பாக கேரள அரசும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசும் அறிக்கை தாக்கல் செய்ய தென்மண்டல தேசிய தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகள் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மாயமாகி இருக்கும் நிலையில், மீட்புப்பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் புதையுண்ட வீடுகளை தோண்டும் பணிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இஸ்ரோ எச்சரிக்கை விடுத்திருந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. நாடு முழுவதும் 147 இடங்களில் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இஸ்ரோ கடந்த ஆண்டே எச்சரித்து இருந்ததாக மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது. இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டயம், இடுக்கி, வயநாடு ஆகிய ஆட்சியர்கள், மீட்புப் பணி மற்றும் சேத விவரங்கள் குறித்த அறிக்கையை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் தமிழ்நாட்டில் இஸ்ரோ குறிப்பிட்ட நீலகிரி, கோவை மாவட்டங்கள் உட்பட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் இருக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிக்கை தரவும், நிலச்சரிவு பகுதிகளில் உள்ள சுரங்கம், குவாரி, சாலை, கட்டுமான திட்டங்கள் பற்றிய விவரங்களை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, வயநாடு நிலச்சரிவை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் எடுத்த முன்னெச்சரிக்கைகள் குறித்து மாநில அரசு அறிக்கை தர தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.