ஏலச் சொத்து விற்பனை சான்றிதழ் பதிவுக்கு 11% பதிவு கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

ஏலச் சொத்துக்களின் விற்பனை சான்றிதழை பதிவு செய்ய 11 சதவீத பதிவுக் கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் குமாரையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "பல்வேறு காரணங்களுக்காக கையகப்படுத்தப்படும் சொத்துக்கள் ஒரு கட்டத்தில் கடன் வசூல் தீர்ப்பாயம், வருவாய்த்துறை மூலம் ஏலத்தில் விடப்படுகிறது. அந்த ஏலத்தில் பங்கேற்று சொத்துக்களை ஏலம் எடுப்பவர் அதற்கான விற்பனை சான்றிதழை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இந்தநிலையில் பத்திரப்பதிவுத்துறை 23.03.2023-ல் பிறப்பித்துள்ள அரசாணையில், ஏலச் சொத்தை வாங்கியவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் விற்பனை சான்றிதழை பதிவு செய்யும்போது, சொத்தின் சந்தை மதிப்பில் 11 சதவீத பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் ஏலச் சொத்தை வாங்கியவர்கள் பாதிக்கப்படுவர். எனவே ஏலச் சொத்துக்கான விற்பனை சான்றிதழை பதிவு செய்ய 11 சதவீத பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு, ஏலச் சொத்துக்கான விற்பனை சான்றிதழை பதிவு செய்ய 11 சதவீத பதிவு கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மனு தொடர்பாக தமிழக பதிவுத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12க்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE