`கிரிக்கெட் விளையாட வாருங்கள்'- இளம்பெண்களை அழைக்கும் அஸ்வின்

By காமதேனு

``கிரிக்கெட் விளையாட்டில் அதிக அளவில் பெண்கள் ஈடுபட வேண்டும்'' என இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்குக் கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்காகத் தமிழக அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் கிரிக்கெட் வீரர் அஸ்வின், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின், ‘’கிரிக்கெட் விளையாட ஆர்வமுள்ள சிறுவர்கள் அதிகமாக இருந்தாலும் அவர்கள் பொருளாதார ரீதியில் சிரமப்படுவர். தற்போது ஏழை மாணவர்களும் சிறந்த கிரிக்கெட் பயிற்சியைப் பெறுவதற்கான வாய்ப்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் சாத்தியமாகியுள்ளது.

இந்த பயிற்சியின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களும் இந்திய கிரிக்கெட் அணியிலோ அல்லது ஐபிஎல் அணிகளிலோ விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகள் அதிக அளவில் கிரிக்கெட் விளையாட முன் வர வேண்டும். அவர்களுக்காகவும் ஐபிஎல் போட்டிகள் எல்லாம் வரவுள்ளது. அதனால்தான் எனது மகளும் தற்போது கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்’’ என்றார்.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்குக் கால்பந்து மற்றும் கிரிக்கெட் பயிற்சி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளக் கால்பந்து மற்றும் கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பின்னர் புதிதாக அமைக்கப்பட்ட மைதானத்தை அமைச்சர் உதயநிதி பார்வையிட்டார். இதன் பின்னர் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் பந்துவீச அமைச்சர் உதயநிதி கிரிக்கெட் விளையாடினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE