ரீல்ஸ் எடுக்க ரயில் தண்டவாளத்தில் சிலிண்டர், சைக்கிள், செங்கல் வைத்த யூடியூபர்!

By KU BUREAU

உத்தரப்பிரதேசம்: ரீல்ஸ் எடுப்பதற்காக தண்டவாளத்தில் கியாஸ் சிலிண்டர், சைக்கிள், செங்கல் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை வைத்த யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், கந்த்ராலி கிராமத்தைச் சேர்ந்த யூடியூபரான குல்சார் ஷேக் என்பவர், தனது சேனலில் ரயில் பாதைகளின் பல வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோக்களைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் ரீல்ஸ் எடுப்பதற்காக தண்டவாளத்தில் கல், சைக்கிள், கியாஸ் சிலிண்டர், செங்கல், சோப்பு, மோட்டார், சுத்தி, இரும்பு, செல்போன் போன்றவற்றை வைத்து ரீல்ஸ் வீடியோக்களை குல்சார் ஷேக் எடுத்துள்ளார்.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களைப் பார்ந்து நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில், ரயில் தண்டவாளத்தில் விபத்து நடந்தால், ரயிலுக்குள் அமர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்து என்பது இந்த யூடியூபருக்குத் தெரியவில்லை என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ வைரலானததை அடுத்து குல்சார் ஷேக் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உத்தரப்பிரதேசத்தின் கந்த்ராலி கிராமத்தில் இருந்த குல்சார் ஷேக் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பாஜக தேசிய ஊடக பிரிவு நிர்வாகி ஷேஜாத், ரயில் தண்டவாளத்தில் ஆபத்தான பொருட்களை வைத்தவரை ரயில் ஜிஹாதி என்று குறிப்பிட்டுள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதற்காக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், போலீஸார், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட குல்சார் ஷேக் மீது ரயில்வே சட்டத்தின் பிரிவுகள் 147,145,153 மற்றும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE