உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு ஜெயித்து இருந்தாலும், திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் சூரியனாய் தகிக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன். பேரவையில் சபாநாயகர் அப்பாவுவுடன் கருத்துமுரண் ஏற்படும் அளவுக்கு வேல்முருகன் வேகம்காட்டி வருகிறார். இந்த நிலையில் காமதேனுவுக்காக அவர் அளித்த பேட்டி இது.
உங்களின் கோரிக்கைகள் செவிசாய்க்கப்படுவதில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால், பேரவையில் ஏற்கெனவே நான்கு நாள்கள் உங்களுக்குத் துணை கேள்வி எழுப்ப போதிய அவகாசம் வழங்கப்பட்டதாக சபாநாயகர் சொல்கிறாரே?
4 நாள்கள் பேச வாய்ப்புக் கொடுத்துவிட்டால், ஐந்தாவது நாள் வாய்ப்புக் கொடுக்கக் கூடாது என எந்த சட்டமன்ற விதியும் கிடையாது. நான் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து மட்டும் தான் கேள்வி கேட்பேன். நீட் தேர்வின் மன அழுத்தத்தினால் என் தொகுதியைச் சேர்ந்த நிஷா என்ற மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அதை சுழிய நேரத்தில் எழுந்து நான் கேள்விகேட்க முயன்றபோது அதற்கும் அனுமதி தரவில்லை. நங்கநல்லூர் தீர்த்தவாரியில் 5 பேர் மரணித்த சம்பவத்திலும் கவன ஈர்ப்பு கொடுத்து இருந்தேன். சம்பவம் நடந்ததும் யார் முதலில் கவன ஈர்ப்பு கொடுக்கின்றார்களோ, அவர்கள் பெயரை வாசித்துத்தான் பேச அழைப்பது சபை மரபு.
ஆனால் சபாநாயகர், வேண்டுமென்றே எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்காமல் நிராகரித்தார். நான் ஏற்கெனவே இருமுறை எம்எல்ஏ, சட்டமன்ற கொறடா, மாற்று சபாநாயகர் என பல பொறுப்புகளில் இருந்துள்ளேன். நான் சட்டப்படி உரிமைகளை கோரும்போது சபாநாயகருக்கு பிடிக்கவில்லை. எனக்கு சபை மரபு தெரியும். அது தெரிந்துதான் நான் பேசுகிறேன்.
பள்ளி, கல்லூரிகள் ஆரம்பிக்கும் போதும், முடியும் நேரங்களிலும் கூடுதல் பேருந்துகள் விடவேண்டும் என துணைக் கேள்வி கேட்க சபாநாயகரிடம் அனுமதி கேட்டேன். அவரது அறையில் வைத்து அனுமதி தந்துவிட்டு, கேள்வி நேரத்தில் நான் கையைத் தூக்கும்போது அனுமதி மறுத்துவிட்டார். பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் போது என் தொகுதிக்குட்பட்ட இருவாய்க்கால்கள் தூர்வாருவது குறித்து பேச சபாநாயகர் அறைக்குப் போய், அவை துவங்கும்முன்பு அனுமதி கேட்டேன். அதற்கு, “ துரைமுருகன் மூத்த அமைச்சர், அவரால் அதிக கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாது” என்றார்.
சுகாதாரத்துறை அமைச்சரிடம் என் தொகுதிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு தொடர்பாக துணைக்கேள்வி கேட்க அனுமதிவேண்டும் என்றேன். உடனே, சபாநாயகர் உதவியாளரை அழைத்து, “குறித்துக் கொள்ளுங்கள்” என்றார். ஆனால் நான் அதன்பின்பு கைதூக்கிய போதும் அனுமதிக்கவில்லை. என்னை இப்படி தொடர்ச்சியாக உதாசீனப்படுத்தினார்.
முக்கிய பிரச்சினைகளின் போதெல்லாம் உங்களைப் பேச அனுமதித்ததாகவும், அனைத்து உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கவேண்டும் எனவும் சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளாரே?
அப்படியானால் சட்டசபையை கூடுதல் நாள்கள் நடத்தலாம் அல்லவா? நேரத்தை நீட்டிப்பு செய்யலாம். அதைவிட்டு, விட்டு குரலை நசுக்கக் கூடாது. அதேபோல் அவரை மிரட்டியதாக அபாண்டமாகச் சொல்கின்றார். அப்படி நான் சபையில் நடந்துகொண்டதே இல்லை. உதயசூரியன் சின்னத்தில் நின்றேன் என்பதாலேயே குத்திக்காட்டுவதும், கேலி செய்வதும் பேரவைத் தலைவருக்கு அழகல்ல.
இன்னொன்று, சட்டசபையில் நேரமின்மை பற்றி அவர் யோசித்தால் அவர் பேசும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் நீங்கள் அவைக் குறிப்பை எடுத்துப் பார்த்தால் கூடுதல் நேரம் அவர்தான் பேசியிருப்பார்.
சபாநாயகர் அப்பாவுவுக்கு இதில் என்ன உள்நோக்கம் இருக்கப் போகிறது?
“என்னை மிரட்ட முடியாது. நான் தென் மாவட்டத்துக்காரன்” என்கிறார். 234 தொகுதிகளின் மக்களின் பிரதிநிதியான அவர் அப்படிப் பேசலாமா? அது அவைக்குறிப்பிலும் இருக்கும். உள்நோக்கம் என்றால், அவர் தலைமையிடம் இருக்கும் விசுவாசத்தைக் காட்ட இப்படிப் பேசுகின்றார். அதற்காக அவர் எங்களைப் போன்றோரை இப்படிச் செய்கிறார். எனக்கும், அவருக்கும் தனிப்பட்ட முரண் எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் அவரது அறைக்குச் செல்லும்போதும் மகன், பேரன் என்றெல்லாம் என்னைச் சொல்வார்.
பேரவையில் நடந்த இந்த மனத் தாங்கல்களை முதல்வரிடம் சொல்லும் வாய்ப்பு கிடைத்ததா?
மூத்த அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு போன்றோரிடம் சொன்னேன். அவர்கள், திமுகவுக்குள்ளேயே சபாநாயகரால் பலருக்கு மனத்தாங்கல் இருப்பதாகச் சொன்னார்கள். சபாநாயகர் தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.
அப்படியானால் பேரவையில் ஜனநாயகம் இல்லை என புரிந்து கொள்ளலாமா?
பாதியளவுக்குத்தான் இருக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். அப்பாவு அனைத்தையும் முறையாகச் செய்வார் என்றால், மூன்றாவது முறையாக எம்எல்ஏ-வாக இருக்கும், எனக்கு பின்னால் இருக்கை கொடுத்து இருப்பது ஏன்? முந்தைய காலங்களில் திமுக, அதிமுக கூட்டணியில் ஜெயித்தாலும், அவர்கள் சின்னத்திலேயே ஜெயித்தாலும் தோழமைக் கட்சிகளுக்கும், எதிர்கட்சியாகவும் பாவித்து உரிய நேரம் கொடுப்பார்கள். ஒத்த கருத்து இல்லையென்றால் வெளிநடப்பு கூட செய்திருக்கிறார்கள். இதெல்லாம் முதல்வருக்குத் தெரியும். இந்த ஜனநாயக மரபு தெரிந்தவர் தான் முதல்வர் ஸ்டாலின். ஆனால், சபாநாயகர் தான் இடையில் நின்று உரிமைகளைப் பறிக்கிறார்.
ஒருபக்கம் மோடியை எதிர்க்கிறீர்கள்... இன்னொருபக்கம், சபாநாயகருடனும் பிரச்சினை என்றால் திமுக கூட்டணியில் தொடர்வதில் சிக்கல் வராதா?
இதை நான் திமுகவுக்கு எதிராகச் சொல்லவில்லை. சபாநாயகரின் ஜனநாயக மரபு மீறல்களைத்தான் சுட்டிக்காட்டுகின்றேன். இந்த விஷயத்தில் திமுக என்னைப் புரிந்து கொள்ளும் என நம்புகின்றேன். புரிந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
நீங்கள் சபாநாயகரை சாடுகிறீர்கள். ஆனால் எதிர்கட்சி வரிசையில் இருக்கும் ஓபிஎஸ் அவரைப் புகழ்கிறாரே?
ஆம், அப்பாவு கனிவான ஆசிரியராகவும், கண்டிப்பான ஆசிரியராகவும் உள்ளார் என சொல்லி உள்ளார் ஓபிஎஸ். அவரது ஆட்சிக்காலத்தில் வன்னியர்களுக்கு எதிராகக் கொண்டு வந்த திட்டங்களை வீதி, வீதியாகப் போய் பரப்புரை செய்தவன் நான். அதனால் எனக்கு எதிராக அவர் இப்படிப் பேசுவதில் ஆச்சரியம் இல்லை.