பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராகத் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என அந்த இயக்கம் அறிவித்துள்ள நிலையில், 5 அடுக்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
மோடி பெயர் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. தீர்ப்பின் காரணமாக ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களைக் காங்கிரஸ் முன்னெடுத்து வரும் நிலையில், பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராகக் கருப்புக் கொடிக்காட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
அதேவேளையில் சென்னைக்கு வருகைதரும் பாரத பிரதமரை வரவேற்கும் விதமாக சென்னையில் பாஜகவினர் திரள வேண்டுமெனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக போலீஸார் பாதுகாப்பைப் பலப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை 26 ஆயிரமாகத் தமிழகக் காவல்துறை உயர்த்தியுள்ளது.
மேலும் மெரினா கடற்கரை அருகில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ண மடம் சார்பில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால் அங்குக் கண்காணிப்பு களைத் தீவிரப்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். நாளை மெரினா கடற்கரைக்குப் பொதுமக்கள் யாரும் வர வேண்டாமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.