தகுதி இழப்பு; கேரளத்தில் ராகுலை வைத்து பாஜக போடும் மினி பிளான்!

By என்.சுவாமிநாதன்

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி, எம்பி பதவியில் இருந்தும் தகுதி இழப்பு செய்யப்பட்டார். இதைத் எதிர்த்து நாடெங்கிலும் காங்கிரஸார் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். ராகுலை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய கேரளத்தின் வயநாடு தொகுதியில் இதன் தகிப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. கல்பேட்டா, சுல்தான் பத்தேரி, மானந்தவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன.

மோடி உருவ பொம்மை எரிப்பு, மத்திய அரசு அலுவலகங்களில் புகுந்து போராட்டம் என மக்களையும் திரட்டிக்கொண்டு தினம் ஒரு இடத்தில் போராடி வருகிறது காங்கிரஸ். ஊடாக, சோர்ந்து கிடந்த காங்கிரஸ் தொண்டர்களை பாஜகவே தட்டி எழுப்பி விட்டதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.

ராகுல் காந்தியின் பாதயாத்திரை

ராகுலின் இந்திய ஒற்றுமைப் பயணத்தால் எந்த அதிசயமும் நடக்கவில்லை என்று பாஜக பரிகாசம் செய்தது. காங்கிரஸோ, ராகுல் யாத்திரையை வெற்றிப் பயணமாகக் கொண்டாடியது. இந்த நிலையில், எம்பி பதவியிலிருந்து ராகுல் தகுதி இழப்பு செய்யப்பட்டது, டெல்லியில் அவரது வீட்டை காலி செய்வதில் காட்டிய அவசரம் இதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்குள் புதிய எழுச்சியை உண்டாக்கி வருகிறது. இதன் தாக்கம் கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இதையெல்லாம் உள்வாங்கி இருந்தாலும் ராகுல் விஷயத்தில் பாஜக போடும் கணக்கே வேறு என்கிறார்கள். பொதுவாக இடதுசாரிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட்கள் அங்கே காங்கிரஸோடு மல்லுக்கு நிற்கிறார்கள். ராகுலின் எம்பி பதவியை பறித்தால் வயநாடு தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும். அப்படி வந்தால் அங்கே ராகுலை மார்க்சிஸ்ட் கட்சியினரே கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். இதனால் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணிக்குள் சலசலப்பு உண்டாகும் - இதுதான் ராகுலை வைத்து கேரளத்துக்காக பாஜக போட்டிருக்கும் மினி பிளான் என்கிறார்கள்.

மேல்முறையீட்டுக்கான அவகாசம் இருப்பதால் கர்நாடக தேர்தலுடன் வயநாடுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. மேல்முறையீட்டிலும் ராகுலுக்கு பாதகமாகவே தீர்ப்பு வரும் பட்சத்தில் வயநாடுக்கு உடனடியாக தேர்தலை அறிவித்து காங்கிரஸைய்யும் கம்யூனிஸ்ட்களையும் மோதவிட்டு வேடிக்கை காட்டும் பாஜக என்கிறார்கள்.

பினராயி விஜயன்

இதுகுறித்து கேரளத்தின் அரசியல் விமர்சகரான விஷ்ணுவிடம் காமதேனுவுக்காகப் பேசினோம். “மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் இன்னொரு ஆட்டம்தான் இது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று கோஷமிடும் பாஜக, கேரளத்தில் சிபிஎம், தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, டெல்லி, பஞ்சாபில் அர்விந்த் கெஜ்ரிவால் என பிராந்தியம் வாரியாக ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளை பார்த்துத்தான் அச்சப்படுகிறது. காங்கிரஸைப் பார்த்து அல்ல.

நரேந்திர மோடி

ராகுலுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் இந்தப் பிராந்தியக் கட்சி தலைவர்களை எல்லாம் ராகுலுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வைக்கமுடியும். அப்படிக் குரல் கொடுக்கும் பட்சத்தில் இவர்கள் எல்லாம் காங்கிரஸுக்கு சாதகமாக இருந்து கொண்டு பாஜகவை ஒன்றுகூடி எதிர்க்கிறார்கள் என்று மக்கள் மன்றத்தில் பாஜக பிரச்சாரம் செய்யும். இதன் மூலம் பிராந்தியக் கட்சிகளையும் அந்தந்த மாநிலங்களில் பலவீனமடைய வைக்க முடியும் என்பது பாஜகவின் கணக்கு” என்றார் அவர்.

சித்திக் எம்.எல்.ஏ

வயநாடு மக்களவைத் தொகுதிக்குள் வரும் கல்பேட்டா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வான சித்திக்கிடம் பேசினோம்.”வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு தனித்த செல்வாக்கு இருக்கிறது. முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் இந்தத் தொகுதியில் முஸ்லிம் லீக் கட்சியும் எங்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள்.

ராகுல் மீது தொகுதிவாசிகளுக்கு பெரிய நம்பிக்கை உண்டு. காரணம், இங்குள்ள பழங்குடி சமூகத்தின் பிரச்சினைகள் தொடங்கி பிரதானமான பல விஷயங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் தீர்வு கண்டுள்ளார் ராகுல். கொரோனா காலத்திலும், பெருவெள்ளத்தின் போதும் தொகுதி மேம்பாட்டு நிதியை மட்டுமல்லாது தனது சொந்தப் பணத்தையும் கணிசமாக செலவு செய்தவர் ராகுல். அதனால் இந்தக் தொகுதிக்கும் அவருக்கும் இடையில் பிரிக்கமுடியாத பந்தம் ஏற்பட்டுவிட்டது.

ராகுல் தான் இந்தியாவின் முகம் என்பதை வயநாடு மக்கள் அறிந்துள்ளனர். அதனால் அவர் வயநாட்டின் எம்பி-யாக இருப்பதையே கெளரவமாக நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட மனிதரை இந்த மக்களைவிட்டு பிரிக்க நினைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் பலிக்காது” என்றார்.

“ராகுல் நடைபயணம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை” என்று இறுமாப்புடன் இருந்த பாஜகவினருக்கு, ராகுலின் எம்பி பதவி தகுதி இழப்பு விவகாரம் உண்மையிலேயே பெரும் குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சோர்ந்து கிடந்த காங்கிரஸ்காரர்களையும் சோம்பல் முறிக்க வைத்திருக்கிறது. இதை எந்தவிதத்தில் ராகுல் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள போகிறார்... அவரைச் சமாளிக்க அடுத்ததாக பாஜக என்ன அஸ்திரத்தை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE