இளைஞர்கள், பெற்றோர்கள் கட்டாயம் கவனியுங்கள்: வீடியோ வெளியிட்டு எச்சரிக்கும் தமிழ்நாடு டிஜிபி

By காமதேனு

’’பணம் கொடுத்தால் ரயில்வே துறையில் நிரந்தர வேலை கிடைக்கும் என்று நம்பி யாரும் ஏமாறாதீர்கள். இது பல ஆண்டுகளாக நடக்கும் மோசடி’’ என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, ‘’படித்த பட்டதாரிகள், வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய ஒரு விசயம். ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, சிலர் பணமும் வாங்கிவிட்டு வேலைக்கான அப்பாயின்ட்மென்ட் ஆர்டரையும் கொடுப்பார்கள்.

நீங்கள் அதனை பெற்றுக்கொண்டு வட இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட ரயில்வே நிலையத்தில் வேலைக்கு சேர முயற்சிக்கும் போது, இது ஒரு போலி நியமன ஆணை என்று கூறி அங்கு உங்களை கைது செய்துவிடுவார்கள். சமீபத்தில் இப்படி சம்பவம் நடந்தபோது நாங்கள் தலையிட்டு உண்மையான குற்றவாளியை ஒப்படைத்து அந்த நபரை மீட்டு கொண்டு வந்தோம். இது போல நிறைய பேர் ரயில்வே துறையில் பணம் கொடுத்து போலி நியமன ஆணைகளை வாங்கி ஏமாந்துள்ளனர்.

ரயில்வே மட்டும் அல்ல, மத்திய, மாநில அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி வேலையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். எந்த அரசு பணிக்கும் அதற்கென ஒரு தேர்வு நடத்தப்பட்டு அதன்மூலமாகவே பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எந்த அரசு துறையும் இன்றைக்கு பணம் மூலம் ஆட்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறை இல்லை. ஆகவே, யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்'’ என்று கேட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE