கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 147 ஆக உயர்வு

By KU BUREAU

வயநாடு: வயநாட்டில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கேரளத்தில் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் உயிரிழந்தோர் எணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்குள் இன்னும் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருப்பதால், உயிரிழப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணியில் ராணுவம் மற்றும் என்டிஆர்எஃப், ராணுவம் மற்றும் கடற்படையின் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. முண்டக்கை பகுதியில் மூன்று மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிலச்சரிவில் ஏராளமான வீடுகள், மரங்கள், மாடுகள், நாய்கள் மற்றும் மக்கள் அடித்து செல்லப்பட்டுள்ளனர். வயநாடு மற்றும் கேரளாவின் அனைத்து வட மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 48 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட 96 சடலங்களின் பிரேதப் பரிசோதனையும் நிறைவடைந்துள்ளது. இதில் 32 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேப்பாடி சமூக சுகாதார நிலையத்தில் தற்போது 78 சடலங்கள் உள்ளன. நிலம்பூர் மாவட்ட மருத்துவமனையில் 32 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கேரளா மாநிலம் முழுவதும் 118 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 5,531 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோழிக்கோடு வாணிமேல் பஞ்சாயத்தில் தொடர்ந்து 9 முறை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்த 12 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி ஒருவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவில் இரண்டு பாலங்கள் சேதமடைந்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE