கொட்டுகிறது கனமழை: கர்நாடகாவில் 5 மாவட்ட மக்களுக்கு ரெட் அலர்ட்

By KU BUREAU

பெங்களூரு: கர்நாடகாவில் கடலோரம் மற்றும் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் அம்மாநிலத்தில் 371 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட 55 சதவீதம் அதிக மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடகாவில் கடலோர மற்றும் மலைப்பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,தட்சிண கன்னடா உள் மாவட்டத்தில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மைசூரு மற்றும் சிக்கபள்ளாபூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தும்கூர், ராமநகரா, பெங்களூரு புறநகர், பெங்களூரு நகர், பெல்லாரி, சாமராஜநகர், சித்ரதுர்கா, தாவண்கெரே, கோலார், மாண்டியா, மைசூர் உள்ளிட்ட விஜயநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

பெல்காம் மாவட்டத்தில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும். பிதர், கலபுர்கி, தார்வாட் மற்றும் ஹாவேரி, விஜயப்பூர், கடக், கொப்பல், ராய்ச்சூர், யாத்கிரி, பாகல்கோட் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யும். சிக்கமகளூரு, ஷிமோகா, ஹாசன், குடகு ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும். கனமழை காரணமாக காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் இருக்கும். இதனால் தட்சிண கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு, குடகு மற்றும் ஷிமோகா ஆகிய 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE