பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி ஆவினுக்கு எதிராக பால் தராமல் வேலை நிறுத்தப் போராட்டத்தை பால் உற்பத்தியாளர்கள் தொடங்கியுள்ளனர்.
ஆவின் பால் நிறுவனம் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் அந்த கோரிக்கை அரசால் செவிமடுக்கப்படவில்லை. தற்போது பசும்பாலுக்கு 35 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் அதை 42 ரூபாயாக உயர்த்த வேண்டும், எருமைப் பாலுக்கு 44 ரூபாய் வழங்கப்படும் நிலையில் அதை 51 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த பத்தாம் தேதியில் இருந்து கவன ஈர்ப்பு போராட்டங்களையும் நடத்தி வந்தனர். அத்துடன் 17-ம் தேதி இருந்து பால் வழங்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்திருந்தனர். அதையடுத்து நேற்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்க அமைச்சர் நாசர் மறுத்துவிட்ட நிலையில் திட்டமிட்டபடி இன்று முதல் போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர் நல சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பால் வாங்குவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் லிட்டர் பால் பாலை உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு வழங்கவில்லை.
ஈரோடு ராயபாளையம் கூட்டுறவு சங்கம் முன்பாக பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கம் முன்பு சாலையில் பாலை ஊற்றி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதுபோல தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் பல லட்சம் லிட்டர் பால் ஆவினுக்கு வரவில்லை. ஏற்கெனவே பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் இன்று முதல் ஆவின் பால் முழுவதுமாக விநியோகம் செய்யப்படுவது முழுவதுமாக தடைபடும் என்று கருதப்படுகிறது.