மனைவி, மகன் முகத்தில் பிளாஸ்டிக் பைகளைக் கட்டி கொலை: சாஃப்ட்வேர் பொறியாளரின் விபரீத முடிவு

By காமதேனு

புனேவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர், அவரது மனைவி மற்றும் எட்டு வயது மகன் ஆகியோர் இன்று புனேவில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர், நிதி நெருக்கடியால் இந்த மரணங்கள் நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

புனேவைச் சேர்ந்த 44 வயதான சுதிப்தோ கங்குலி, சொந்த தொழில் தொடங்குவதற்காக தனது சாஃப்ட்வேர் வேலையை கைவிட்டுள்ளார். இந்த நிலையில் நகரின் அவுந்த் பகுதியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில், தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவி பிரியங்கா மற்றும் மகன் தனிஷ்காவின் உடல்களும் அருகில் உயிரிழந்த நிலையில் கிடந்தன.

இது கொலை-தற்கொலை வழக்காகத் தெரிகிறது என்று போலீஸார் தெரிவித்தனர். கங்குலி தனது மனைவி மற்றும் மகனைக் கொன்று தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கங்குலியின் மனைவி மற்றும் குழந்தையின் முகத்தில் பிளாஸ்டிக் பைகள் சுற்றப்பட்டிருந்தன. எனவே அவர்களின் முகத்தில் பிளாஸ்டிக் பைகளைக் கட்டி மூச்சுத்திணறடித்து கொன்ற பிறகு, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE