கேரளாவில் வரலாறு காணாத நிலச்சரிவு முதல் ஒலிம்பிக்கில் சாதித்த மனு பாகர் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

கேரளாவில் வரலாறு காணாத நிலச்சரிவு: கேரளத்தில் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி, இந்தப் பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்தது. 125-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 98 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணுவ உதவியுடன் மீட்புப் பணி தொடரும் நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், "வயநாடு நிலச்சரிவு, கேரளா இதுவரை கண்டிராத மிகப் பெரிய இயற்கை பேரழிவு” என்று குறிப்பிட்டார். உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என அஞ்சப்படுவதாக தெரிவித்த அவர், 3,069 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரணம்: தமிழக அரசு - வயநாடு வெள்ள, நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கென ரூ.5 கோடி நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை தமிழக அரசின் சார்பில் வழங்க தயாராக இருப்பதாக பினராயி விஜயனிடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

ஜார்க்கண்ட் அருகே ரயில் விபத்து: 2 பேர் பலி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மும்பை நோக்கிச் சென்ற மும்பை - ஹவுரா பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் புரட்டிப் போடப்பட்டன. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.

கனமழை: வால்பாறை, பொள்ளாச்சியில் மூவர் உயிரிழப்பு: கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், சோலையார் அணை, இடதுகரை பகுதியில் மழுக்குப்பாறை செக்போஸ்ட்டிலிருந்து பன்னிமேடு செல்லும் பொதுப்பணித் துறைச் சாலையின் அருகில் உள்ள வீட்டின் அருகே மண்சரிவு ஏற்பட்டதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி என்ற 57 வயது மூதாட்டியும், தனப்பிரியா என்ற 15 வயந்து சிறுமியும் உயிரிழந்தனர்.

இதனிடையே, பொள்ளாச்சி வட்டம், திப்பம்பட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான ஓட்டு வீட்டின் மேற்குப்பக்கச் சுவர் மழையினால் இடிந்து மேற்குப் பக்க ஓட்டு வீட்டின்மீது விழுந்ததில், வீட்டினுள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஹரிஹரசுதன் என்ற 21 வயது இளைஞர் உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை; மூவருக்கு 18 மாதம் சிறை: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ள இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம், இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்ட 3 மீனவர்களுக்கு தலா 18 மாதம் சிறை தண்டனை விதித்ததுடன், 5 படகுகளை அரசுடமையாக்கியும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேஜ்ரிவாலை விடுவிக்கக் கோரி இண்டியா கூட்டணி போராட்டம்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவரை உடனடியாக விடுவிக்கக் கோரி இண்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பஞ்சாப் முதல்வர் பகந்த் மான், கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், ஆம் ஆத்மி தலைவர்கள் கோபால் ராய், ராகவ் சத்தா, காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, “அரவிந்த் கேஜ்ரிவாலை விடுவிக்கும் வரை நாம் ஓயவே கூடாது. அமலாக்கத் துறையை பயன்படுத்தி கைது செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் விடுவிக்கபட வேண்டும்” என்று சென்னையில் நடந்த போராட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

‘எந்த மாநிலமும் பின்தங்குவதை நான் விரும்பவில்லை’ - முதலீட்டை ஈர்க்க மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும் என்றும், நாட்டின் எந்த மாநிலமும் பின்தங்குவதை நான் விரும்பவில்லை என்றும் இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ராகுல் காந்திக்கு பியூஷ் கோயல் பதிலடி: மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “நாட்டின் அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட தலைவர்கள் மற்றும் தனி நபர்கள் மீது அவநம்பிக்கையை, துவேஷத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு நேற்று ராகுல் காந்தி பேசி இருக்கிறார். இண்டியா கூட்டணிக்கு தேசிய சிந்தனை இல்லை. பகுத்தறிவற்ற கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை மட்டுமே அவர்கள் முன்வைக்கிறார்கள். மக்களுக்கு வழங்க நேர்மறையான நிகழ்ச்சி நிரல் எதுவும் அவர்களிடம் இல்லை” விமர்சித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம்: பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இது பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது பதக்கம். முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் மனு பாகர், வெண்கலம் வென்று அசத்தி இருந்தார்.

இந்தப் பதக்கத்துடன், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியர் என்ற தனித்துவ சாதனையை படைத்துள்ளார் மனு பாகர். துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவு மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி என இரண்டிலும் அவர் வெண்கலம் வென்றுள்ளார்.

அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி: ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஹாக்கி போட்டியில் 2-0 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி. ஹர்மன்பிரீத் சிங்கின் இரு அசத்தல் கோல்களால் இந்த வெற்றி சாத்தியமானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE