பெங்களூரு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, கர்நாடகா முதல்வர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். பட்ஜெட் குறித்த அடிப்படை அறிவு அமைச்சருக்கு இல்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பட்ஜெட் விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே தீவிர கருத்து மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கூற்றுப்படி, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு (2004-2014) கர்நாடகாவிற்கு ரூ.60,779 கோடி வழங்கியிருந்தது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு (2014-2024) கர்நாடகாவிற்கு ரூ.2,36,955 கோடி வழங்கியுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: “கர்நாடகாவுக்கு மோடி அரசு இழைத்துள்ள அநீதிகளை மறைக்க நிதியமைச்சர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.
அவரின் தவறான அறிக்கைகள் இறுதியில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு குறைந்தபட்ச ஆதரவையே வழங்கியுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் பட்ஜெட் அளவு எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை அவர்கள் குறிப்பிட மறந்துவிட்டனர். இந்த புறக்கணிப்பு அறியாமையால் நடந்ததா அல்லது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் திட்டமிட்ட முயற்சியா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
» மினிமம் பேலன்ஸ் அபராதம்: 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி வசூல் செய்த பொதுத்துறை வங்கிகள்
» கேரளாவில் நிலச்சரிவு: அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என மோடி உறுதி
2013-14ல் மத்திய பட்ஜெட் ரூ.16.06 லட்சம் கோடியாக இருந்தது. அப்போது, கர்நாடகா மானியமாக ரூ.16,428 கோடியும், வரிப் பங்காக ரூ.15,005 கோடியும் மொத்தம் ரூ.31,483 கோடியைப் பெற்றது. இது மொத்த பட்ஜெட்டில் 1.9 சதவீதம். 2024-25ல் மத்திய அரசின் பட்ஜெட் அளவு ரூ.48.02 லட்சம் கோடி. இந்த காலகட்டத்தில் கர்நாடகா மானியமாக ரூ.15,229 கோடியும், வரிப் பங்காக ரூ.44,485 கோடியும் மொத்தமாக பட்ஜெட்டில் 1.2 சதவீதம் பெறும். 2013-14ல் இருந்த அதே 1.9 சதவீத பங்கை கர்நாடகா பெற்றால், மாநிலத்திற்கு ரூ.91,580 கோடி கிடைக்கும்.
நரேந்திர மோடி அரசின் அநீதியால், 2024-25ம் ஆண்டில் கர்நாடகாவுக்கு ரூ.31,866 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து கர்நாடகாவுக்கு வரிப்பங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தவறான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அநியாயமாக வரிகள் மற்றும் மானியங்களை ஒதுக்கீடு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமன், மாநில நலனுக்கு எதிராக செயல்பட்டது நகைப்புக்குரியது. அவரது செயல்களைப் பார்க்கும்போது, கர்நாடகாவின் நிதி நிலை குறித்து பேச அவருக்கு தார்மீக அதிகாரம் இல்லை.” இவ்வாறு முதல்வர் சித்தராமையா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.