நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நில ஒதுக்கீட்டில் முறைகேடுகள்: நீதிபதி அதிரடி உத்தரவு

By காமதேனு

நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் நிலம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக பெருமளவு குற்றச்சாட்டு பொதுவெளியில் எழுந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான நிலம் கடந்த 1994ம் ஆண்டு உசா என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தை ஸ்ரீதர் என்பவர் வாங்கி உணவகம் நடத்தி வந்த நிலையில் அவர் மரணத்திற்கு பிறகு அந்த இடத்திற்கு தமக்கு பட்டா வழங்ககோரி அவரது மனைவி உமா மகேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விற்பனை சட்ட விரோதம் என்பதால் பட்டா வழங்கமுடியாது என கூறினார். இதனிடையே அந்த இடத்தை சார்லஸ் என்பவர் தற்போது ஆக்கிரமித்து உணவகம் நடத்தி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரபட்டது.

இந்நிலையில் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், நிலம் ஒதுக்கீட்டு பதிவேட்டில் நிலம் ஒதுக்கீடு பெற்றவர் பெயருக்கு பதிலாக நிலத்தை வாஙகியர் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். தற்போதைய ஆக்கிரமிப்பை இரண்டு மாதங்களில் அப்புறப்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆள்பலம், அரசியல் தொடர்பு உள்ளிட்டவைகளால் இது போன்ற முறைகேடுகளும் ஊழலும் நடைபெறுவதாக தெரிவித்துள்ள நீதிபதி, வீடு அற்ற ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் துவங்கப்பட்ட நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் முறைகேடுகளை அனுமதிப்பது என்பது அந்த நோக்கத்தையே வீழ்த்திவிடும் எனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இது போல முறைகேடுகளாக நிலம் ஒதுக்கீடு பெற்றவர்களையும், ஆக்கிரமிப்பாளர்களையும் அப்புறப்படுத்த வேண்டுமெனவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE